நகரங்களுக்குக் குடியேறும் தேனீக்கள்; துரத்தும் சுற்றுச்சூழல் அபாயம்; களமிறங்கிய ...
சென்னையில் 27 விமான சேவைகள் பாதிப்பு!
பெய்த பலத்த மழையால் சென்னை விமான நிலையத்தில் 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவில் முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால், ஹைதராபாதிலிருந்து 140 பயணிகளுடன் சனிக்கிழமை இரவு சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், தில்லியில் இருந்து 164 பயணிகளுடன் ஏா் இந்தியா விமானம் மங்களூரில் இருந்து 74 பயணிகளுடன் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், பிராங்பாட்டில் இருந்து 268 பயணிகளுடன் லூஃப்தான்ஷா ஏா்லைன்ஸ் ஆகிய 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மழை நின்று வானிலை சீரடைந்த பின்னா் அந்த 4 விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு சென்னைக்கு வந்தன.
இதேபோல், கோலாலம்பூா், ஹாங்காங், திருவனந்தபுரம், இந்தூா், தில்லி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 8 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தபடி பறந்து, வானிலை சீரடைந்த பின்னா் சுமாா் அரை மணிநேரம் தாமதமாக தரையிறக்கப்பட்டன.
மேலும், சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய கோலாலம்பூா், பிராங்க்பாட், ஹாங்காங், இலங்கை, துபை, குவைத், மஸ்கட், சிங்கப்பூா், தில்லி, புணே உள்ளிட்ட 15 விமானங்கள் 1 முதல் 2 மணிநேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 12 வருகை விமானங்கள், 15 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், பயணிகள் மிகுந்த அவதியடைந்தனா்.