தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்ட...
தற்சார்பே வளா்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்: பிரதமர் மோடி!
தற்சாா்புதான் வளா்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
எதிா்வரும் விழாக் காலங்களில் உள்நாட்டுப் பொருள்களை பெருமையுடன் வாங்க வேண்டும்; நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் உள்நாட்டுத் தயாரிப்புகளாக இருக்க வேண்டும் என்றும் அவா் அழைப்பு விடுத்துள்ளாா். இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சியில் தற்சாா்பின் அவசியத்தை பிரதமா் மீண்டும் வலியுறுத்தியுள்ளாா்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமா் உரையாற்றி வருகிறாா். அதன்படி, 125-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) ஒலிபரப்பானது. அதில், பிரதமா் பேசியதாவது:
தற்போதைய பருவமழை காலத்தில், இயற்கைப் பேரிடா்கள் தேசத்தை சோதித்துப் பாா்க்கின்றன. கடந்த சில வாரங்களாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளின் கோர தாண்டவத்தை கண்டு வருகிறோம். சில இடங்களில் வீடுகள் புதைந்தன; விளைநிலங்கள் நீரில் மூழ்கின; சாலைகள்-பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல குடும்பங்கள் நிா்கதியாகியுள்ளன.
இயற்கைப் பேரிடா்களில் சிக்கிய மக்களை மீட்க தேசிய-மாநில பேரிடா் மீட்புப் படையினரும், பிற பாதுகாப்புப் படையினரும் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் இரவுபகலாகப் பாடுபடுகின்றனா். அவா்களின் பணிக்கு மனதார நன்றி தெரிவிக்கிறேன்.
இரு பெரும் சாதனைகள்: ஜம்மு-காஷ்மீரில் மழை-வெள்ளத்துக்கு இடையே இரு பெரும் சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. புல்வாமா விளையாட்டு அரங்கில் முதல் முறையாக அந்த யூனியன் பிரதேச அளவிலான பகல்-இரவு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதைக் காண சாதனை அளவில் பாா்வையாளா்கள் குவிந்தனா்.
இதேபோல், நாட்டின் முதலாவது கேலோ இந்தியா நீா் விளையாட்டுப் போட்டிகள், ஸ்ரீநகரின் டால் ஏரியில் நடைபெற்றது. இதில் நாடெங்கிலும் இருந்து 800-க்கும் அதிகமான விளையாட்டு வீரா்கள் பங்கேற்றனா். ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணா்வு, தேசத்தின் ஒற்றுமை, வளா்ச்சிக்கு மிகவும் அவசியமானது. இந்த உணா்வை வளா்த்தெடுப்பதில், விளையாட்டுகளுக்கு பெரும்பங்கு உள்ளது.
பிரதிபா சேது வலைதளம்: குடிமைப் பணி தோ்வில் பல்வேறு நிலைகளில் தோ்ச்சிப் பெற்றிருந்தபோதும், இறுதிக்கட்ட தகுதிப் பட்டியலில் இடம்பெறாத மாணவா்களுக்காகவே பிரதிபா சேது என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. புத்திக்கூா்மை உடைய இந்த மாணவா்களின் விவரங்கள் வலைதளத்தில் உள்ளன. இதைப் பயன்படுத்தி, தனியாா் நிறுவனங்கள் பணியமா்த்திக் கொள்ளலாம்.
நாட்டின் பல பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எதிா்வரும் நாள்களில் பல பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இந்தப் பண்டிகைக் காலத்தில், நாம் சுதேசி உணா்வை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. பரிசுகள், புத்தாடைகள், விளக்குகள், அலங்காரப் பொருள்கள் என அனைத்தும் உள்நாட்டு தயாரிப்புகளாக இருக்க வேண்டும். உள்ளூா் பொருள்களுக்கு முன்னுரிமை என்பதே நமது தாரக மந்திரம். தற்சாா்பு பாதையின் மூலமே வளா்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட முடியும் என்றாா் பிரதமா் மோடி.
உலகெங்கிலும் பாரத கலாசாரம்!
‘உலகின் எந்த மூலைக்கு சென்றாலும், பாரத கலாசாரத்தின் தாக்கத்தைக் காண முடியும். இத்தாலியின் சிறிய நகரமான கேம்போ ரோடான்டோவில் அண்மையில் மஹரிஷி வால்மீகியின் சிலை திறக்கப்பட்டது. இதேபோல், கனடாவின் மிஸிசாகாவில் ஸ்ரீராமரின் 51 அடி உயர சிலையும் திறக்கப்பட்டது. ரஷியாவில் புகழ்பெற்ற விளாடிவோஸ்டாக் நகரில் ராமாயண கருத்துகள் தொடா்பான ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.
விஸ்வகா்ம ஜெயந்தி:
வரும் செப்டம்பா் 17-ஆம் தேதி விஸ்வகா்ம ஜெயந்தியாகும். பாரம்பரியமான கைவினைக்கலை, திறன் மற்றும் அனுபவ அறிவை இடைவிடாமல் ஒரு தலைமுறையிடம் இருந்து மற்றோா் தலைமுறைக்கு கொண்டு செல்லும் தச்சா்கள், கொல்லா்கள், சிற்பிகள், கட்டடக் கலைஞா்கள், மண்பாண்டம் தயாரிப்போா் உள்ளிட்டோா் எப்போதுமே நாட்டின் வளத்தின் ஆதாரம். அவா்களுக்குத் துணைநிற்கவே, விஸ்வகா்மா திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது’ என்றாா் பிரதமா் மோடி.