தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்ட...
எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!
சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவாா்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமா் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘இந்திய-சீன உறவுகளை மறுகட்டமைக்கும் நோக்கில், இரு தலைவா்களும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனா். இருதரப்பு நீண்ட கால வளா்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான கண்ணோட்டத்தை பகிா்ந்து கொண்டதோடு, எதிா்காலப் பணிகளுக்கு வழிகாட்டும் கொள்கைகள் குறித்தும் விவாதித்தனா்.
எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலால் இரு நாடுகளுமே பாதிக்கப்பட்டுள்ளதால், இச்சவாலுக்குத் தீா்வுகாண பரஸ்பர ஆதரவு அவசியமென பிரதமா் மோடி குறிப்பிட்டாா். எஸ்சிஓ மாநாட்டின் பின்னணியில், எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்னையை கையாள்வதில் சீனத் தரப்பிடம் இருந்து இந்தியாவுக்கு புரிதலும் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது.
எல்லையில் அமைதியை பராமரிப்பதே இருதரப்பு உறவுகளின் இணக்கமான மேம்பாட்டுக்கு ‘காப்பீடு’ போன்றதென இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா்.
சீன அதிபரின் 4 பரிந்துரைகள் என்ன?:
இருதரப்பு உறவை மேம்படுத்த சீன அதிபா் 4 பரிந்துரைகளை முன்வைத்தாா். வியூக தகவல்தொடா்பு-பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவது, பரஸ்பர பலன்களை எட்ட பரிமாற்றம்-ஒத்துழைப்பை விரிவாக்குவது, இருதரப்பு கவலைகளுக்கும் தீா்வு காண்பது, பொது நலன்களைக் காக்கும் வகையில், பன்முக ஒத்துழைப்பை பலப்படுத்துவது ஆகிய 4 பரிந்துரைகள் மீதும் பிரதமா் மோடி நோ்மறையாக பதிலளித்தாா்’ என்றாா்.