Gold Rate: ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை; பவுனுக்கு ரூ.77,700-ஐ தாண்டியது; இன்ற...
மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்: மும்பை சாலைகளை வீடாக்கிய போராட்டக்காரர்கள்; நிலவரம் என்ன?
மராத்தா சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி மனோஜ் ஜராங்கே பாட்டீல் கடந்த 3 நாட்களாக மும்பையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மகாராஷ்டிரா முழுவதும் இருந்து 30 ஆயிரம் மராத்தா இன மக்கள் மும்பையில் முகாமிட்டு தென்மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்திற்கு நடுவே தொடர்ந்து மும்பையில் மழையும் பெய்து வருகிறது. இதனால் போராட்டக்காரர்கள் கடுமையான சவாலைச் சந்தித்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் அவர்கள் தங்குவதற்குக் கூட வசதி இல்லாமல் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் தங்கி இருக்கின்றனர். இதனால் ரயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையை விடப் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு வேண்டிய சாப்பாட்டைக் கூட தயார் செய்ய இடவசதி இல்லாமல் தென்மும்பையில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படும் சாலையில் சமையல் செய்கின்றனர். அல்லது கிராமத்திலிருந்து அவர்கள் வந்த வாகனங்களில் சமையல் செய்கின்றனர்.

மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதியைக் செய்து கொடுத்து இருக்கிறது. மனோஜ் ஜராங்கே உண்ணாவிரதம் இருக்கும் ஆசாத் மைதானத்தை போராட்டக்காரர்கள் தங்களது முகாம்களாக மாற்றி இருக்கின்றனர்.
ஆசாத் மைதானத்திற்கு வெளியில் இருக்கும் சாலை போக்குவரத்திற்கு மூடப்பட்டுவிட்டது. சாலையில் இருபுறமும் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதியிலிருந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருப்பவர்கள் தங்களது வாகனங்களை வரிசையாக நிறுத்தி இருக்கின்றனர்.
அந்தச் சாலையில்தான் அவர்கள் அதிகமான நேரம் குளிக்கின்றனர். மாநகராட்சி கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் டேங்கர் தண்ணீர் எடுத்துத் திறந்த வெளியில் சாலையில் குளிக்கின்றனர். மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு எதிரில் ஒரு பவுண்டன் இருக்கிறது.
அதிலும் சிலர் குளித்ததைப் பார்க்க முடிந்தது. அதோடு சாலையின் மையப்பகுதியில் அமர்ந்து கொண்டு சமையல் செய்கின்றனர். சாலையில் அமர்ந்து பேசிக்கொண்டே அவர்கள் காய்கறிகளை வெட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. அந்தச் சாலையில்தான் உறங்குகின்றனர்.
அவர்கள் இரவில் சமையல் செய்து அதனை பார்சல்களாக பேக் செய்து காலையில் அனைவருக்கும் வழங்குகின்றனர். அவர்கள் வரும்போதே சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள், உணவுப் பொருட்களை எடுத்து வந்திருக்கின்றனர். அவர்கள் மீது போலீஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இருக்கின்றனர்.
எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது அடுத்த இரண்டு மாதத்தில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிகளுக்குச் சிக்கலை ஏற்படுத்தும். எனவே போராட்டக்காரர்கள் என்ன செய்தாலும் அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

மாநகராட்சி தலைமை அலுவலகத்தின் அனைத்து வழிகளையும் மூடிவிட்டு வெறும் இரண்டு வழிகளை மட்டும் திறந்து வைத்திருக்கின்றனர். சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால் போராட்டக்காரர்கள் சாலையில் டிரம்ஸ் அடித்தபடி நடனமாடுகின்றனர்.
அதிகமானோர் மும்பையில் பிரபலமான லால்பாக் ராஜா கணபதியைத் தரிசிக்கச் சென்றனர். இது தவிர போராட்டக்காரர்கள் மும்பையில் சுற்றுலாப் பயணிகள் பார்க்கக்கூடிய இடங்களுக்கு மொத்தமாகச் செல்கின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் தங்களுக்கு குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கவில்லை என்று கூறி சி.எஸ்.டி. ரயில் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோஜ் ஜராங்கே மைக் மூலம் போக்குவரத்துக்கு இடையூறு செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட பிறகுதான் அவர்கள் அங்கிருந்து கலைந்தனர்.
அதன் பிறகுதான் மாநகராட்சியும் தேவையான தண்ணீர் டேங்கர்களைக் கொண்டு வந்து நிறுத்தியது. கணிசமானவர்கள் தங்களது வாகனங்களை அருகில் உள்ள நவிமும்பையில் நிறுத்திவிட்டு அங்கேயே முகாமிட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் உள்ள 8 மாவட்டத்திலிருந்து 8 ஆயிரம் வாகனங்களில் போராடக்காரர்கள் வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை மும்பையிலிருந்து செல்ல மாட்டோம் என்று மனோஜ் ஜ்ராங்கே தெரிவித்துள்ளார். மும்பையில் ஆரம்பத்தில் ஒரு நாள் மட்டும் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி வழங்கினர். அது தினமும் ஒரு ஒரு நாளாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.