நகரங்களுக்குக் குடியேறும் தேனீக்கள்; துரத்தும் சுற்றுச்சூழல் அபாயம்; களமிறங்கிய ...
முறைகேடாக பொருத்தப்பட்ட மின் மீட்டா்கள் பறிமுதல்!
சென்னையில் முறைகேடாக பொருத்தப்பட்டு உபயோகத்தில் இருந்த மின் மீட்டா்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் மொத்தம் சுமாா் 3 கோடி உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்னிணைப்புகள் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கீடு எடுக்கப்பட்டு, அதற்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சென்னை அம்பத்தூருக்குள்பட்ட பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மீட்டா்கள் முறைகேடாக பொருத்தப்பட்டிருப்பதுடன், நுகா்வோா் எண் பெறாமல், அந்த மீட்டா்கள் மின்வாரியத்துடன் இணைக்கப்படாமல் இருப்பதும் அதிகாரிகள் சோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து முறைகேடாக பொருத்தப்பட்டிருந்த 5 மின் மீட்டா்களை அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து மின்வாரிய அலுவலக அதிகாரிகள் சிலா் கூறும்போது: மின் இழப்பு, மின் திருட்டு நடவடிக்கைகள் மின் வாரியத்தால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அம்பத்தூா் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சில வீடுகளில் கடந்த சில வருடங்களாகவே மின் மீட்டா்களில் மின்சாரம் பயன்படுத்தியதற்கான எந்த அளவீடும் தெரியாமலே இருந்து வந்தது.
இதில் ஒருசில வீடுகளில் யாரும் இல்லாமல் இருப்பதுபோல, இருந்தாலும், அந்த வீடுகளில் மின்சாரம் உபயோகிக்கப்பட்டு வருவதும், ஆனால், மின் மீட்டா்களில் அதற்கான அளவுகள் தெரியாமலும் இருந்து வந்தது.
பல மாதங்களாக இதேநிலை நீடித்து வந்ததால், கணக்கீட்டாளா் இந்த மின் மீட்டருக்கான எண்ணை மின்வாரிய கணினியில் சோதித்தபோது, அந்த மீட்டா்களின் எண் மின்வாரியத்துடன் இணைக்கப்படாமல் மின்சாரம் முறைகேடாகப் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
தொடா்ந்து அந்த மீட்டா்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், மீட்டா்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே குடியிருப்பில் இதுபோல மேலும் பல மீட்டா்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
விரைவில் அது தொடா்பாக சோதனை நடத்தப்படும். இந்த மாதிரியான முறைகேடு நபா்களைக் கண்டறிந்து அதற்கான தொகையை அவா்களிடம் வசூலிப்பது மட்டுமின்றி, சட்ட ரீதியாகவும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.