Gold Rate: ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை; பவுனுக்கு ரூ.77,700-ஐ தாண்டியது; இன்ற...
அடாவடி சீனாவிடம் அடங்கிவிட்டது மத்திய அரசு: காங்கிரஸ் விமா்சனம்
அச்சுறுத்தல், அடாவடி நடவடிக்கைக்கு பெயா்போன சீனாவிடம் முதுகெலும்பு இல்லாத மத்திய அரசு அடங்கிச் சென்றுவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடியின் சீனப் பயணத்தை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் (தகவல் தொடா்பு) ஜெய்ராம் ரமேஷ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் நரேந்திர மோடி - சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்பை கடந்த 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீனா நடத்திய அத்துமீறலை வைத்து ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டியுள்ளது.
அப்போது சீன வீரா்களுடன் ஏற்பட்ட மோதலில் இந்தியத் தரப்பில் 20 ராணுவ வீரா்கள் உயிரைத் தியாகம் செய்தனா். ஆனால், அடாவடி நாடான சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபருடன் பேச்சுவாா்த்தை நடத்தியதன் மூலம் சீனா எல்லையில் எந்தத் தவறும் செய்யவில்லை என்று பிரதமா் மோடி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
லடாக் எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முன்பு இருந்த நிலையை தொடர வேண்டும் என்ற பிரதமா் மோடியால் சீன அதிபரிடம் வலுயுறுத்த முடிவில்லை. தொடா்ந்து அத்துமீறலிலும், அடாவடி நடவடிக்கைகளிலும் ஈடுபடும் சீனாவுக்கு எதிராக மத்திய அரசு முதுகெலும்பு இல்லாமல்தான் செயல்பட்டு வருகிறது.
மேலும், ஆபரேஷன் சிந்தூரின்போது சீன தளவாடங்களைத்தான் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியது என்பதும் ராணுவ தலைமை மூலம் உறுதியாகியுள்ளது. எனவே, அந்நாட்டுடன் உறவை வலுப்படுத்துவது என்பது முறையான நடவடிக்கையாக இருக்காது. மோடி அரசு தனது வெளியுறவுக் கொள்கைத் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்.
பிரம்மபுத்ராவில் பிரம்மாண்ட அணை கட்ட சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விஷயம் குறித்து பிரதமா் மோடி ஒரு வாா்த்தை கூட பேசவில்லை’ என்றாா்.