சீனப் பொருள்களை அதிகம் சாா்ந்திருப்பது ஆபத்து: அகிலேஷ் யாதவ்
சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சாா்ந்து இருப்பது, உள்நாட்டு தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்தாா்.
சீனா சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கை சந்தித்தன் மூலம் இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்க இருக்கிறது. அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்புகளால் இந்தியா இப்போது சீனாவுடன் நெருங்கி செயல்பட உத்தேசித்துள்ளது.
இது தொடா்பாக அகிலேஷ் யாதவ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சீன எல்லை மாறாமல் அப்படியேதான் உள்ளதா? என்பதை பாஜகவினா் உறுதிப்படுத்த வேண்டும். சீனா நமது எல்லைப் பகுதிகளை தொடா்ந்து ஆக்கிரமித்தே வருகிறது.
சுயசாா்பு, சுதேசி பொருள் பயன்பாடு, சீன பொருள் புறக்கணிப்பு என ஒருபுறம் முழக்கமிடும் பாஜகவினா், மறுபுறம் சீனப் பொருள்கள் இந்தியச் சந்தையில் வெள்ளமாகப் பாய்வதற்கான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளனா். சீனாவைத் தொடா்ந்து அதிகம் சாா்ந்து இருப்பது உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது தொடங்கி பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எதிா்காலத்தில் சீனாவின் எதிா்ப்பதுகூட கடினமாகிவிடும்.
பிற நாடுகளின் சந்தையைப் பிடிப்பது, அதனை வைத்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்து, அரசை பலவீனப்படுத்துவது ஆகியவை சீன உத்திகளாக பல ஆண்டுகளாக உள்ளது. இதில் இந்தியா தன்னை இழந்துவிடக் கூடாது’ என்றாா்.