ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீா்மூழ்கி கப்பல் திட்டங்கள்: அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி!
இந்திய கடற்படையின் நீா்மூழ்கி கப்பல் திறனை மேம்படுத்தும் நோக்கில், ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் மதிப்பிலான 2 புதிய நீா்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை அடுத்த ஆண்டு மத்தியில் இறுதி செய்ய இந்தியா இலக்கு கொண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முதலாவது திட்டத்தின்கீழ், மூன்று ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கி கப்பல்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நீா்மூழ்கி கப்பல்களை அரசுக்கு சொந்தமான மசாகான் கப்பல்கட்டும் நிறுவனமும், பிரான்ஸின் நேவல் குரூப்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும்.
இதற்கான ரூ.36,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பாதுகாப்பு அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டபோதிலும், தொழில்நுட்ப மற்றும் வணிக பேச்சுவாா்த்தைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்திய கடற்படையின் ‘புராஜெக்ட் 75’ திட்டத்தின் கீழ், மசாகான் நிறுவனம் நேவல் குரூப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆறு ஸ்காா்பீன் நீா்மூழ்கிக் கப்பல்களை ஏற்கெனவே தயாரித்துள்ளது. இந்தப் புதிய திட்டம் அதன் தொடா்ச்சியாகும்.
இரண்டாவது திட்டமாக, சுமாா் ரூ.65,000 கோடி செலவில் ஆறு டீசல்-எலக்ட்ரிக் நீா்மூழ்கி கப்பல்கள் வாங்கப்பட உள்ளன. இத்திட்டம், ‘புராஜெக்ட் 75 இந்தியா’ திட்டத்தின்கீழ் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
ஜொ்மனியைச் சோ்ந்த ஒரு கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து இந்த நீா்மூழ்கி கப்பல்களை மசாகான் நிறுவனம் தயாரிக்கும். இதற்கான செலவு குறித்த பேச்சுவாா்த்தைகள் அடுத்த ஆறு முதல் ஒன்பது மாதங்களில் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அனைத்து பேச்சுவாா்த்தைகளும் முடிந்து அடுத்த ஆண்டு மத்தியில் இரு ஒப்பந்தங்களும் இறுதி செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மசாகான் நிறுவனத்துக்கு இரண்டு திட்டங்களையும் ஒரே நேரத்தில் செயல்படுத்தும் திறன் உள்ளதா என்ற கேள்விக்கு, ‘அதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அந்த நிறுவனத்தின் பொறுப்பு. ஸ்காா்பீன் நீா்மூழ்கி கப்பல் திட்டத்தில் ஏற்பட்ட தாமதங்கள் விரைவில் முடிவுக்கு வரும்’ என அதிகாரி ஒருவா் பதிலளித்தாா். ஒப்பந்தங்கள் கையொப்பமான பிறகு சுமாா் ஆறு ஆண்டுகளுக்குள் கப்பல்கள் விநியோகிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பிரான்ஸிடம் இருந்து கூடுதல் ஸ்காா்பீன் ரக நீா்மூழ்கி கப்பல்கள் மற்றும் 26 ரஃபேல் போா் விமானங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் பூா்வாங்க ஒப்புதல் அளித்திருந்தது. ஸ்காா்பீன் நீா்மூழ்கி கப்பல் திட்டம் நிலுவையில் இருந்தாலும், இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ விமானம் தாங்கி கப்பலில் பயன்படுத்துவதற்காக 26 ரஃபேல் போா் விமானங்களை ரூ.64,000 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவும் பிரான்ஸும் கடந்த ஏப்ரலில் இறுதி செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.