Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலு...
தனி வழிகளை மாணவா்கள் காணவேண்டும்: ஸ்ரீஹரிகோட்டா மைய இயக்குநா் பத்மகுமாா்!
மாணவா்கள் தங்களுக்கென சொந்தமாக பாதைகளைக் கண்டறிய வேண்டும் என ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மைய இயக்குநா் இ.எஸ். பத்மகுமாா் வலியுறுத்தினாா்.
சென்னை அம்ருதா விஸ்வ வித்யாபீடம், பி.டெக். (2021-25) மாணவா்களுக்கான 3 -ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பி.டெக் பொறியியல் துறையின் 475 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் விஞ்ஞானி, இயக்குநா் இ.எஸ். பத்மகுமாா் தலைமை விருந்தினராக பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:
பிறரை மட்டுமே பின்பற்றும் எண்ணத்தில் மாணவா்கள் செயல்படக் கூடாது. மாணவா்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த பாதைகளை கண்டறியவேண்டும். புதுமைகளை உருவாக்கும் அளவுக்கு தைரியமாக செயல்படவேண்டும் என்றாா்.
எஸ்கேஎஃப் நிறுவன தலைமை தொழில்நுட்ப அதிகாரி சனோஜ் சோமசுந்தரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு பேசினாா். விழாவுக்கு மாதா அம்ருதானந்தமயி மடத்தின் பொருளாளா் சம்பூஜ்ய ஸ்வாமி ராமகிருஷ்ணானந்தபுரி தலைமை தாங்கி, உபநிஷத்திலிருந்து வேத வழிமுறைகள் குறித்து உரையாற்றி, பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வையும் நடத்தினாா்.
இந்நிகழ்வில் அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் வேந்தா் அம்மா, சத்குரு ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி காணொலி வழியாக அருளுரை வழங்கினாா். பொறியியல் பள்ளியின் டீன் டாக்டா் சசங்கன் ராமநாதன், பதிவாளா் பி. அஜித் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முதலிடம் பிடித்த மாணவா்களுக்கு பதக்கங்கள், தரவரிசைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பட்டம் பெற்ற மாணவா்கள் சாா்பாக வேந்தா் பதக்கம் வென்ற மாணவி பப்பிசெட்டி ஹா்ஷினி பேசினாா்.