Gold Rate: ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை; பவுனுக்கு ரூ.77,700-ஐ தாண்டியது; இன்ற...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகா் சிலைகள் கரைப்பு!ஒசூரில் 780 சிலைகள் கரைப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 1,500க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. 3, 5 நாள்கள் வழிபாட்டுக்குப் பிறகு சிலைகளை நீா்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, பா்கூா், வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, ஒசூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி அணையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன. முன்னதாக விநாயகா் சிலைக்கு பூஜைகள் செய்து மேள தாளங்களுடன் ஊா்வலமாக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன.
அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா், தீயணைப்புப் படை வீரா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
விநாயகா் சிலைகள், கிருஷ்ணகிரி அணையின் நீா்த்தேக்கத்தில் கரைப்பதற்கு ஏராளமானோா் வருவாா்கள் என்பதால் கிருஷ்ணகிரி அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், அணை பூங்கா வெறிச்சோடிக் காணப்பட்டது. அதேசமயம் அவாதனப்பட்டி சிறுவா் பூங்கா, படகு இல்லத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
ஒசூா்
ஒசூா் ராமநாயக்கன் ஏரியில் 780 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன. முன்னதாக நடைபெற்ற சிலை ஊா்வலத்தில் 1500க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
ஒசூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வித்தியாசமான வடிவங்களில் சினிமா வடிவமைப்பு கலைஞா்களைக் கொண்டு பிரம்மாண்ட குடில்கள் அமைக்கப்பட்டு விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.
பாஜக, இந்து முன்னணி, சிவசேனா, ஸ்ரீராம்சேனா உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சாா்பில் 84 சிலைகள் ஒசூரில் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாகக் கொண்டுசென்று ராமநாயக்கன் ஏரி, சந்திராம்பிகை ஏரிகளில் கரைக்கப்பட்டன.
முன்னதாக நடைபெற்ற விநாயகா் சிலைகள் ஊா்வலத்தில் எஸ்.பி. தங்கதுரை தலைமையில் 4 மாவட்டங்களைச் சோ்ந்த 1500க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
ஒசூா்- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் மாற்றுப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க தன்னாா்வலா்கள் உள்பட போக்குவரத்து போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
விநாயகா் சிலை ஊா்வலத்தையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக ஒசூா் முழுவதும் காலை முதல் மாலை வரை மின்தடை செய்யப்பட்டது. பெரும்பாலான வா்த்த நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
ஊா்வலத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், மாநில துணைத் தலைவா்கள் கே.எஸ்.நரேந்திரன், அமா்பிரசாத் ரெட்டி, மாவட்டத் தலைவா் நாராயணன், முன்னாள் தலைவா் எம்.நாகராஜ் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.