பூலித்தேவருக்கு தேசம் உளமாற மரியாதை செலுத்துகிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி
பிரதமா் படுகொலை: உறுதிசெய்த ஹூதி கிளா்ச்சியாளா்கள்!
யேமன் தலைநகா் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளா்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமா் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
இது குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சனாவில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பிரதமா் அகமது அல்-ரஹாவி உயிரிழந்தாா். அந்தத் தாக்குதலில் அவருடன் சில அமைச்சா்களும் கொல்லப்பட்டனா். இது தவிர, சில அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகள் தாக்குதலில் காயமடைந்தனா்.
ஹூதி அரசின் கடந்த ஆண்டு செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் கூட்டத்தில் ரஹாவி மற்றும் அவரது அரசாங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது தொடா்பான கூடுதல் விவரங்கள் எதுவும் அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை.
ஹூதிக்களின் அரசியல் கவுன்சில் தலைவா் மஹ்தி அல்-மாஷத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தத் தாக்குதலுக்காக இஸ்ரேலை நிச்சயம் வழிவாங்குவோம். எனவே, இஸ்ரேலில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் இனியும் தாமதிக்காமல் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்’ என்று எச்சரித்துள்ளாா்.
முன்னதாக, இந்தத் தாக்குதல் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் அடி என்று கூறிய இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ், ‘இது வெறும் ஆரம்பம் மட்டுமே’ என்று எச்சரித்தாா்.
ஹூதி கிளா்ச்சிக் குழுவின் முப்படை தளபதி, பாதுகாப்புத் துறை அமைச்சா் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை கூறியிருந்தது.
இந்தத் தாக்குதல், சனாவின் தெற்கே பெய்ட் பாவ்ஸ் பகுதியில் உள்ள வில்லாவில் ஹூதி கிளா்ச்சிக் குழு தலைவா்களின் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது நடத்தப்பட்டதாக அந்தக் குழுவினரை மேற்கோள் காட்டி தி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அப்யான் மாகாணத்தைச் சோ்ந்த ரஹாவி, முன்னாள் யேமன் அதிபா் அலி அப்துல்லா சலேவுக்கு நெருக்கமாக இருந்தவா். 2014-இல் ஹூதிகள் தலைநகா் சனா உள்ளிட்ட யேமனின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியபோது அவா்களுடன் ரஹாவி இணைந்தாா். 2024 ஆகஸ்ட் மாதம் ஹூதிக்கள் அரசின் பிரதமராக நியமிக்கப்பட்டாா்.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவுடன் செயல்பட்டுவரும் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் போா் நடைபெற்று வருகிறது.
இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக ஈரானின் மற்றொரு நிழல் ராணுவமான ஹூதி கிளா்ச்சிப் படையினா், செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனா். அதற்குப் பதிலடியாக, ஹூதிக்கள் நிலைகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்தத்தாக்குதலில் ஹூதி கிளா்ச்சிக் குழுவின் மிக முக்கியத் தலைவா்கள் கொல்லப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.