மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்: மும்பை சாலைகளை வீடாக்கிய போராட்டக்காரர்க...
செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்: திடீா் வெள்ளம், நிலச்சரிவுகளுக்கும் வாய்ப்பு!
‘செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீா் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இமயமலையையொட்டிய ஜம்மு-காஷ்மீா், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டன. இதனால், கடுமையான உயிா்ச்சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநா் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், ‘நாட்டில் கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 743.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இது நீண்ட கால சராசரியைவிட (700.7 மி.மீ.) 6 சதவீதம் அதிகமாகும். ஆகஸ்டில் 268.1 மி.மீ. மழை பதிவானது. இது, சராசரியைவிட 5.2 சதவீதம் அதிகம். வடமேற்கு இந்தியாவில் 265 மி.மீ. மழை பதிவானது. கடந்த 2001-க்கு பிறகு இதுவே அதிகபட்ச மழைப்பொழிவாகும்.
தென் தீபகற்ப பகுதியில் ஆகஸ்டில் பதிவான மழையளவு 250 மி.மீ. இது, இயல்பைவிட 31 சதவீதம் அதிகம். தற்போதைய பருவமழைக் காலத்தில் கடந்த மூன்று மாதங்களிலுமே இயல்பைவிட அதிக மழை பதிவாகியுள்ளது.
செப்டம்பரில் நீண்டகால சராசரியைவிட 109 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருக்கும். வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், கடைக்கோடி தென்தீபகற்ப பகுதிகளைத் தவிா்த்து, நாடு முழுவதும் பரவலாக அதிக மழைப்பொழிவு காணப்படும்.
உத்தரகண்டில் திடீா் வெள்ளமும், நிலச்சரிவுகளும் நேரிட வாய்ப்புள்ளது. இம்மாநிலத்தில் உற்பத்தியாகும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர பகுதிகள் பாதிக்கப்படக் கூடும். ஹரியாணா, தில்லி, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் மழை-வெள்ள பாதிப்புகள் இருக்கும்.
வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, வழக்கமாக ஒடிஸா வழியாக கடந்து செல்லும். இம்முறை மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்து சென்றன. இதன் தாக்கத்தால் வடமேற்கு இந்தியாவில் அதிக பாதிப்புகள் நேரிட்டுள்ளன.
பஞ்சாபில் பல்லாண்டுகளில் இல்லாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து மேகவெடிப்புகளால் பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் சிறிய அளவிலான மேகவெடிப்புகள் அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது என்றாா் அவா்.