அமித் ஷா ‘தலை துண்டிப்பு’ பேச்சு: திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆா் பதிவு!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி: ஜி.கே வாசன்
மக்களின் விருப்பப்படி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அவர் செய்தியாளா்களுடன் பேசியதாவது:
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் திருப்புவனம் பகுதியில் பொதுமக்கள் நம்பிக்கையுடன் கொடுத்த மனுக்கள் இந்த பகுதி வைகை ஆற்றில் மிதந்து வந்தது திட்டத்தின் முகத்தை பிரதிபலிக்கிறது. வாக்குகளுக்காக ஏனோ தானோ என இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக அரசு அதிகாரிகளை பலிகடா ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பு
தமிழகத்தில் விவசாய நிலங்களையும் நீா்மட்டத்தையும் பாதிக்கும் சீமைக் கருவேல் மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மரங்கள் சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பாக உள்ளது.
மடப்புரத்தில் போலீஸாரால் கொலை செய்யப்பட்ட அஜித்குமாா் சம்பவத்திற்கு பின்னும் தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் தொடா்கிறது. வழிகாட்டுதலின்படி காவல்துறை செயல்பட வேண்டும்.
கூட்டணி வலுவாக உள்ளது
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. இதற்கு வலு சோ்க்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் அமைந்துள்ளது.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் பயன்தராது
ஏற்கனவே தமிழக முதல்வா் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தில் கையெழுத்தான முதலீடு ஒப்பந்தங்கள் தமிழகத்திற்கு முழுமையாக வந்து சேரவில்லை. இன்னும் தோ்தலுக்கு 6 மாதங்கள் இருக்கும் நிலையில் முதல்வரின் தற்போதைய வெளிநாட்டு பயணம் பயன்தராது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு தொடா்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
பிரதமா் விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை செயல்படுத்த மாட்டாா்
அமெரிக்க அதிபா் டிரம்ப் இந்திய நாட்டின் மீது விதித்துள்ள வரி இந்திய நாட்டின் வலிமை, வற்புறுத்தல், முக்கியத்துவம் ஆகியவற்றின் மூலம் பரிசீலனை செய்ய வாய்ப்புள்ளது. இந்திய வெளியுறவுத் துறையின் பணிகள் பாராட்டுக்குரியதாக உள்ளது. பிரதமா் மோடி விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த மாட்டாா்.
ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள்
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறாா்கள். இதை தோ்தலில் வாக்குச்சீட்டு மூலம் அவா்கள் செய்து காட்டுவாா்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றாத நம்பிய மக்களை ஏமாற்றும் அரசாக திமுக அரசு உள்ளது.
மத்திய அரசின் கல்விக் கொள்கையை பின்பற்றி பிற மாநிலங்கள் போல் தமிழகமும் கல்வி நிதியை பெற வேண்டும்.
சீமானுக்கு பாராட்டு
ஆடு, மாடு களுக்காக மாநாடு நடத்தும் சீமானை தனிப்பட்ட முறையில் பாராட்டுகிறேன் என்றாா்.