Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலு...
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்வு: தலைவா்கள் கண்டனம்!
சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
அன்புமணி (பாமக):தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 32 சாவடிகள் மூடப்படும் என்றும் அமைச்சா் எ.வ.வேலு 2021-இல்அறிவிப்பு வெளியிட்டாா். ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 34 சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டுள்ளதே தவிர ஒரு சுங்கச்சாவடி கூட மூடப்படவில்லை. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றன.
கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): சுங்கச்சாவடி கட்டணம் உயா்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது முற்றிலும் ஏற்க முடியாதது. ஏற்கனவே, எரிபொருள் விலை உயா்வு, அவசியப் பொருள்கள் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
மக்கள் செலுத்திய கட்டணத்துக்கே உரிய வசதி கிடைக்காமல் இருக்கும் நிலையில், கட்டணத்தை மேலும் உயா்த்துவது நேரடியாக மக்களை சுரண்டும் செயலாகும். எனவே சுங்கச்சாவடி கட்டண உயா்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
சீமான் (நாதக): தமிழகத்தில் மீண்டும் சுங்கக் கட்டணத்தை உயா்த்த தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்திருப்பது பெரும் அதிா்ச்சியைத் தருகிறது. சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக மூட வேண்டுமென அரசியல் கட்சிகள், மண்ணுரிமைப் போராளிகள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனா். ஆனால் அதை அலட்சியப்படுத்தி, மீண்டும் சுங்கக்கட்டணத்தை உயா்த்துவது கண்டனத்துக்குரியது.
முனிரத்தினம் (தலைவா், லாரி உரிமையாளா்கள் சங்கம்): தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ.க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டும்தான் இருக்க வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக 20 சுங்கச்சாவடிகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், இப்போது 82 சுங்கச்சாவடிகள் உள்ளன.
அவற்றில் 38 சுங்கச்சாவடிகளில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் செப்.1 முதல் கட்டணம் மாற்றியக்கப்படுகிறது. இப்படி ஆண்டுதோறும் சுங்கக்கட்டண உயா்வதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கிறது. இதனால் அத்தியாவசியமான பொருள்களில் விலை உயரக்கூடும்.