ஆனந்த விகடன் & கிங் மேக்கர் அகாடமி இணைந்து நடத்திய UPSC / TNPSC தேர்வுகளுக்கான பயிற்சி முகாம்!
IAS, IPS போன்ற அரசு வேலைகள் இங்கே பலரின் கனவு வேலையாக இருக்கிறது. ஆனால் சிலருக்கு அது வெறும் கனவாகவே இருக்கிறது. அந்தக் கனவை நினைவாக்குவதற்கு ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர் அகாடமி இணைந்து 31/08/2025 இன்று சென்னையில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் அரசு குடிமையியல் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக “யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி-யில் வெல்வது எப்படி?” எனும் தலைப்பில் இலவச பயிற்சி முகாம் நடத்தியது.
இந்த பயிற்சி தொடங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு ஒரு வருட பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வானது OMR விடைத்தாள்களில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஆனந்த விகடன் சார்பில் வெ.நீலகண்டன் வரவேற்புரை வழங்கி இந்நிகழ்வை துவங்கி வைத்தார். முதலாவதாக ஸ்கில் மேக்கர் அகாடமி இயக்குனர் சத்திய ஸ்ரீ பூமிநாதன் துவக்க உரையாற்றிய போது, “குடிமைப் பணியாளர் தேர்வுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மற்ற மீடியாவை விட விகடன் ரொம்ப முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது” என்று துவங்கினார்.

“இந்த தேர்வு குறித்து முக்கியமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்” என்று இந்த பயிற்சி முகாமின் நோக்கத்தையும் கூறினார். பின்னர் “யார் இந்த UPSC தேர்வு எழுதி இருக்கிறீர்கள்?” என்ற ஒரு கேள்வியை மாணவர்கள் மத்தியில் வைத்தார். அப்பொழுது அங்கு வந்திருந்த மாணவர்களில் ஓரிரு மாணவர்கள் மட்டும் கையை உயர்த்தினார்கள்.
அதற்கு, “வேலை வேணும்னு ஆசைப்படுறோம்,கவர்மெண்ட் வேலை வேணும்னு ஆசைப்படறோம் ஆனா தேர்வுக்கு நம்ம விண்ணப்பிக்க மாட்டோம்” என்றும், “14 லட்சம் பேர் UPSC தேர்வுக்கு அப்ளை செய்வார்கள். ஆனால், அதில் 25 ஆயிரம் பேர் மட்டும் தான் சின்சியராக எழுதுவாங்க மொத்த இந்தியாவிலே” என்று மாணவர்களை ஊக்குவித்து, “என்னுடைய வாழ்நாள் லட்சியமே தமிழ்நாட்டில் இருந்து ஒரு லட்சம் பேரை அப்ளிகேஷன் போட வைக்கணும். தனியார் பயிற்சி மையங்களுக்கு சமமாகயும் தனியார் பயிற்சி மையங்களை விட சிறந்ததாகவும் அரசு பயிற்சி மையங்களும் வந்துள்ள காலகட்டத்தில் நீங்கள் தற்போது TNPS,UPSC எக்ஸாம் எழுத போறீங்க.” என்றவாறு தன் உரையை நிறைவு செய்தார்.



இதனைத் தொடர்ந்து Dr.விஜய கார்த்திகேயன் IAS உரையாற்றினார்.
“அதில் நேரத்தை சரியாக செலவு செய்து உழைத்தோம் என்றால் நிச்சயமாக நாம் வெற்றி பெற முடியும். எக்ஸாம் ஹால்ல பதட்டமே இருக்கக் கூடாது. நீங்க பிரிலிம்ஸ் பிரிப்பேர் பண்ணும் போதே ஒரு கேள்விக்கு ஒரு பக்கம் அளவுக்கு நீங்க நோட்ஸ் எடுக்க ஆரம்பிச்சிட்டிங்கன்னா அதுவே உங்களுக்கு மெயின்ஸ்க்கு ஹெல்ப் பண்ணும். மெயின்ஸ் பொறுத்த அளவு உங்களுக்கு தெரிஞ்சத முதல்ல எழுதுங்க,தெரியாததை கடைசில எழுதிக்கோங்க ஏன்னா எல்லாருக்குமே எல்லாமே தெரிஞ்சிடாது. காலேஜ்ல விவாதம், குவிஸ் போன்ற போட்டிகளில் நீங்க பேர் குடுங்க. நீங்க ஜெயிக்கிறீர்களோ இல்லையோ அது இரண்டாவது விஷயம் ஆனால் நீங்க முதல்ல கலந்து கொள்ளுங்க.
நான் அடிப்படையில ஒரு மருத்துவர் நிறைய புக் எழுதி இருக்கேன். நிறைய எக்ஸ்ப்ளோர் பண்ணி இருக்கேன்" என்றார்.
இதனைத் தொடர்ந்து குடிமைப்பணி தேர்வு பற்றி திரு.வெ.திருப்புகழ் IAS அவர்கள் பேசிய பொழுது
“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது இல்லை. நான் எந்த ஒரு பயிற்சி மையத்திற்கும் செல்லவில்லை. எங்கள் வீட்டு திண்ணையில் தான் உட்கார்ந்து நான் படித்துக் கொண்டிருந்தேன். எனவே யாம் பெற்ற துன்பம் பெற வேண்டாம் இவ்வையகம் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியில் பேச வந்திருக்கிறேன்.” என்றவாறு துவங்கினார். “பிரிலிம்ஸ் சேலத்தில் எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து படித்தேன். மெயின்ஸுக்கு திருச்சியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து படித்தேன். யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் முதல் முயற்சி தமிழகத்தில் யுபிஎஸ்சி தேர்வில் முதலாவதாக வந்தேன். குடிமைப் பணியில் சேர்ந்தால் பணத்தை தாண்டி, பதவியைத் தாண்டி, ஆழமான நோக்கம் உள்ள ஒரு நிறைவான வாழ்க்கை கிடைக்கும். குடிமைப் பணியில் சென்றீர்கள் என்றால் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக கற்றுக் கொள்வீர்கள். ஒவ்வொரு ஆண்டும் புதிய அனுபவம் பெறுவீர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் புதிய சவால்களை மேற்கொள்வீர்கள். IAS ஆக வேண்டும் என்றால் முதலில் நீங்கள் MASஆக வேண்டும் MAS என்றால் MASTER OF ALL SUBJECT. உறக்கம் வரும் வரை எவ்வளவு நேரம் படிப்பது என்பதல்ல படிப்பு. உறக்கம் வந்த பிறகும் எவ்வளவு நேரம் படிப்பது என்பது தான்.” என்றார்.
இதனைத் தொடர்ந்து கிங் மேக்கர் IAS அகாடமி இயக்குனர் சத்திய ஸ்ரீ குருவி நாதன், ஸ்காலர்ஷிப் பெறும் முதல் 10 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர் மாணவர்கள் மனதில் ஏற்பட்ட ஐயங்கள் மற்றும் கேள்விகளுக்கு விடையளித்தார்.