ராகுல் பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பாஜக போராட்டம்!
பிகாரில் ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பேரணியில், பிரதமர் மோடியின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடியோவைச் சுட்டிக்காட்டி காங்கிரஸுக்கு எதிராக பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது.
அந்த விடியோவில், பிகாரில் ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பேரணியில் ஒரு நபர் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரை அவமதித்து ஹிந்தியில் பேசுவதாக சொல்லப்படுகிறது. இதனைச் சுட்டிக்காட்டி இன்று (ஆக. 31) கான்பூரில் காங்கிரஸுக்கு எதிராக காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்களால் பதற்றமான சூழல் நிலவியது.
அவர்களுக்கு எதிராக பெரும் எண்ணிக்கையில் காங்கிரஸ் தொண்டர்களும் கைகளில் தடிகளுடன் திரண்டதால் கான்பூரில் பதற்றம் அதிகரித்தது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் போராடிய நிலையில், பதற்றம் தணிந்தது.
அதேபோல, ஜம்முவிலும், அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டியிலும் பிற இடங்களிலும் காங்கிரஸுக்கு எதிராக பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.