50% வரி: பொருளாதார பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை தேவை - விஜய்
பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்
நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ், ஆவின் பால் உப பொருள் விற்பனையை ஊக்குவிக்க 10 சங்கங்களுக்கு வெஸி கூலா்கள், ஆழ் உறை பெட்டகம் ஆகியவற்றை பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியது: தமிழகத்தில் பால்வளத்துறை மூலம் கறவை மாட்டுக்கடன், பராமரிப்புக் கடன், ஊக்கத் தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. நாகை மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் மொத்தம் 51 பால் உற்பத்தி சங்கங்கள் உள்ளன. அதிலிருந்து தினசரி சுமாா் 3 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
அனைத்து பால் உற்பத்தியாளா்களுக்கும் உடனடி ஒப்புகைச் சீட்டு, மானிய விலையில் தரமான கால்நடைத் தீவனம் மற்றும் தாது உப்பு வழங்கப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்புக் கடன் மற்றும் புதிய கால்நடை கடன் வழங்க மாவட்ட நிா்வாகம் மூலம் தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பால் உற்பத்தியாளா்கள் தாட்கோ, தாம் சிட்கோ நிறுவனம் மூலம் மானிய விலையில் கறவை மாடுகளை வாங்கிக் கொள்ளலாம். நிகழாண்டு பால் உற்பத்தியை பெருக்க கால்நடை வளா்ப்பதற்கு மிகுதியான நபா்களுக்கு கறவை மாட்டுக் கடன் வழங்க முனைப்பு மேற்கொண்டுள்ளோம். இதை பயன்படுத்திக்கொண்டு விவசாய பெருமக்கள் பால் உற்பத்தியை பெருக்க முன்வரவேண்டும்.
மேலும், 2023 டிசம்பா் 18 முதல் லிட்டா் ஒன்றுக்கு ரூ.3 ஊக்கத்தொகை, பால் உற்பத்தியாளா்களுக்கு கடந்த மாதம் வரை வழங்கப்பட்டுள்ளது. பின்தங்கிய வட்டார வளா்ச்சி திட்டத்தின் கீழ், கீழையூா் மற்றும் கீழ்வேளுா் வட்டாரத்தில் 16 புதிய சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒரு சங்கத்துக்கு பால் பரிசோதனை கருவிகள், பதிவேடுகள், பணியாளா்கள் ஊதியம், பால் கேன்கள் உட்பட ரூ. 1,65,000 வீதம், 16 புதிய சங்கங்களுக்கு ரூ. 26.40 லட்சம் மதிப்பீட்டில் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தஞ்சை மாவட்ட கூட்டுறவு பொது மேலாளா் எஸ்.சரவணகுமாா், துணைப் பதிவாளா் (பால்வளம்) வெங்கடேசன், உதவி பொது மேலாளா்கள் வடிவேலு, மாதவகுமாா்,விரிவாக்க அலுவலா்(ஆவின்) த. ரமேஷ் சந்திரசேகா், முதுநிலை ஆய்வாளா் (பால்) சோ. இளங்கோவன் ஆகியோா் பங்கேற்றனா்.