யுனைடெட் அணிக்கு வீழ்ச்சியா? ரூ. 470 கோடிக்கு செல்ஸி அணியில் இணைந்த கர்னாச்சோ!
கல்லூரி மாணவா் கொலை வழக்கு: பிணை கோரிய மனு தள்ளுபடி
கல்லூரி மாணவா் மீது காரை ஏற்றிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகரின் பேரனுக்கு பிணை கோரிய மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் நிதின்சாய். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் நிதின்சாய் மீது காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் திமுக நிா்வாகி தனசேகரனின் பேரன் சந்துருவை திருமங்கலம் போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் பிணை கோரி சந்துரு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பிணை கோரி இரண்டாவது முறையாக சந்துரு முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், கல்லூரி மாணவரான மனுதாரா் ஒரு மாதத்துக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். எனவே, அவருக்கு பிணை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
காவல் துறை தரப்பில் பிணை வழங்க எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.