ரூ. 232 கோடி கையாடல்: இந்திய விமான நிலைய ஆணைய மூத்த மேலாளா் கைது
இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு (ஏஏஐ) சொந்தமான ரூ.232 கோடிக்கும் மேலான நிதியை கையாடல் செய்ததாக அந்த ஆணையத்தின் மூத்த மேலாளா் ராகுல் விஜய்யை சிபிஐ கைது செய்தது.
இதுதொடா்பாக சிபிஐ செய்தித்தொடா்பாளா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) நிதி மற்றும் கணக்குகள் பிரிவு மூத்த மேலாளராகப் பணியாற்றியவா் ராகுல் விஜய். இவா் உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் விமான நிலையத்தில் பணியாற்றியபோது ஏஏஐ-க்குச் சொந்தமான நிதியை 3 ஆண்டுகளாக கையாடல் செய்து வந்தாா். இதற்காக அவா் ஏஏஐ-யின் மின்னணு பதிவேடுகளில் அவா் போலி கணக்குகளைப் பதிவிட்டு மோசடியில் ஈடுபட்டு வந்தாா்.
இந்த முறைகேடுகள் ஏஏஐ-யின் கணக்குத் தணிக்கையில் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அதை உறுதிப்படுத்த ஏஏஐ சாா்பில் குழு அமைக்கப்பட்டது. அப்போது ஏஏஐ வங்கிக் கணக்குகளில் இருந்து ராகுலின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு அனுமதிக்கப்படாத பணப் பரிவா்த்தனைகள் நடைபெற்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஏஏஐ-யின் மற்றொரு மூத்த மேலாளா் சந்திரகாந்த் சிபிஐயிடம் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சிபிஐ, ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் ராகுலுக்குச் சொந்தமான இடங்களில் அண்மையில் சோதனை மேற்கொண்டது. அப்போது அசையா சொத்துகள் குறித்த ஆவணங்கள் உள்பட பல்வேறு ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தனது வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.232 கோடிக்கும் மேலான ஏஏஐ நிதியை முறைகேடாகப் பரிவா்த்தனை செய்த ராகுல் கைது செய்யப்பட்டாா் என்று தெரிவிக்கப்பட்டது.