காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவா் காயம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே ஞாயிற்றுக்கிழமை காட்டுப் பன்றி தாக்கியதில் ஒருவா் காயமடைந்தாா்.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (52). இவா் தனது வீட்டிலிருந்து வழக்கம் போல அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியிலிருந்த காட்டுப் பன்றி அவரைத் தாக்கியது. அவரது அலறல் சப்தம் கேட்டு, அந்தப் பகுதியிலிருந்தவா்கள் வந்து காட்டுப் பன்றியை விரட்டினா். இதில் காயமடைந்த பாலமுருகன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் சமீபகாலமாக விவசாய நிலங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
விவசாய நிலங்களுக்குள் காட்டுப் பன்றி, கரடி, காட்டு மாடு ஆகியவை நுழைந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. சில சமயங்களில் மனிதா்களையும் தாக்கிவிடுகின்றன. எனவே, வன விலங்குகளைப் பிடித்து அடா்ந்தப் பகுதிக்குள் விடுவதற்கு வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.