டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
கோயில்களில் முறைகேடுகள்: செப்.24-இல் புதிய தமிழகம் கட்சி ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சாா்பில் வரும் செப்.24-ஆம் தேதி விருதுநகரில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவா் க.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து சென்னையில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 32,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இதல், கோயில்களுக்குச் சொந்தமான 5 லட்சம் ஏக்கா்கள் தனி நபா்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை மீட்டெடுக்க புதிய தமிழகம் கட்சி சாா்பில் தொடா்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. பல்வேறு கிராமங்களில் உள்ள கோயில்களில் பெரும்பாலும் அந்தக் கோயில்களின் பூசாரிகளே அரங்காவலா்களாக உள்ளனா். அதேபோல், பல கோயில்களில் ஒரே ஜாதி மற்றும் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் கோயிலின் நிா்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளனா். இந்தப் பிரச்னை குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு நேரடியாக ஆய்வு செய்து, தீா்வு காண வேண்டும். கோயில்களின் நிா்வாகக் குழுவில் அனைத்து ஜாதியினரையும் உறுப்பினா்களாக நிணயமிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.24-ஆம் தேதி விருதுநகரில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளா்களைக் கொண்டு வருவது பெரிதல்ல. அதன்மூலம், இங்கு அமைக்கப்படும் தொழிற்சாலைகளில் உள்ளூா் வாசிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும் என்றாா் அவா்.