இந்தியா - சீனா இடையே நிலையான உறவால் 280 கோடி மக்களுக்கும் பயன்: வெளியுறவுச் செயல...
`அனுமதியின்றி என்னைத் தொட்டார்' - நடிகை அஞ்சலி ராகவ்; மன்னிப்பு கேட்ட போஜ்புரி நடிகர்
போஜ்புரி படங்களில் நடித்து வருபவர் நடிகர் பவன் சிங். இவரும் அஞ்சலி ராகவ்வும் நடித்த பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் பவன் சிங் தனது அனுமதி இல்லாமல் அடிக்கடி தன்னைத் தொட்டதாகக் கூறி அஞ்சலி ராகவ் இரண்டு வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இது போன்று நடந்து கொண்டதால் இனி போஜ்புரி படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில்,''கடந்த இரண்டு நாட்களாக நான் மிகவும் மன வேதனையில் இருக்கிறேன்.பொது இடங்களில் அப்படித் தொடுவதை நான் மகிழ்ச்சியாக உணருவேன் அல்லது அனுபவிப்பேன் என்று நினைக்கிறீர்களா?. ஏதோ இடித்துவிட்டதாக சொன்னார்கள். நான் எனது குழுவினரிடம் கேட்டபோது அப்படி எதுவுமில்லை என்று சொன்னார்கள். அப்போதுதான் நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன்.
எனக்குக் கோபமாக இருந்தது, எனக்கு அழவும் தோன்றியது. ஆனால் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் அங்கிருந்த அனைவரும் அவரின் ரசிகர்கள், அவரை கடவுள் என்று அழைத்து, அவரின் காலில் விழுந்து, தங்களை பக்தர்கள் என்று அழைத்துக்கொண்டனர். எந்தவொரு பெண்ணையும் அவளின் அனுமதியின்றி தொடுவதை நான் முற்றிலும் ஆதரிக்கவில்லை. முதலில், அது மிகவும் தவறு. மேலும் இந்த முறையில் ஒருவரைத் தொடுவது மிகவும் தவறு. இதுவே ஹரியானாவில் நடந்திருந்தால் நான் பதில் கொடுக்கவேண்டியதில்லை. பொதுமக்களே பதில் கொடுத்திருப்பார்கள். இனி நான் போஜ்புரி படங்களில் நடிக்க மாட்டேன்''என்று குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது நடிகர் பவன் சிங் நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,''அஞ்சலி பணி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக உங்களது பதிவை பார்க்க முடியவில்லை. உங்களது பதிவை பார்த்தபோது மிகவும் மோசமாக உணர்கிறேன். நாம் கலைஞர்கள் என்பதால் உங்கள் மீது எனக்கு எந்தத் தவறான எண்ணமும் இல்லை. அப்படியிருந்தும், என் நடத்தையால் நீங்கள் புண்பட்டிருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.
இந்த மன்னிப்பு தொடர்பாக அஞ்சலி ராகவ் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,''பவன் சிங்ஜி தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் என்னை விட மூத்தவர் மற்றும் மூத்த கலைஞர். நான் அவரை மன்னித்துவிட்டேன். இந்த விஷயத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல நான் விரும்பவில்லை. ஜெய் ஸ்ரீ ராம்''என்று குறிப்பிட்டுள்ளார்