சென்னையில் கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு!
ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள்: பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்!
ரயில் பெட்டியில் பயணி தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள், பணம், செல்போனை ரயில்வே போலீசார் மீட்டு பத்திரமாக ஒப்படைத்தனர்.
கோவை சாரதா மில் ரோடு, முத்தையா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (53). இவர் சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் ரயிலில் வந்துள்ளார். கோவை ரயில் நிலையம் வந்ததும் தங்களது பொருள்களுடன் இறங்கினர். ஆனால், அவர்கள் கொண்டு வந்த விலை உயர்ந்த பொருள்கள் இருந்த ஒரு கைப் பையை ரயிலிலேயே தவறவிட்டுவிட்டனர்.
இதனிடையே, பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் மணிகண்டன் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்த போது ஒரு கைப்பை கிடப்பதை கவனித்துள்ளார். மேலும் அந்த பைக்குள் சில விலை உயர்ந்த நகைகள் இருப்பதை உறுதி செய்துள்ளார்.
இதையடுத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அலுவலகத்திற்கு அந்த கைப்பை கொண்டுச் சென்றார்.
இந்த நிலையில், ரவிக்குமார் வீட்டிற்கு சென்று தனது பொருள்களை பரிசோதித்துள்ளார். அப்போது, கைப்பை ரயிலிலேயே தவறவிட்டதை உணர்ந்தவர், உடனடியாக கோவை ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அந்நேரத்தில் அந்த கைப்பையில் இருந்த ஒரு செல்போன் ஒலித்தது. அதில் ரவிக்குமார் தனது கைப்பை தொலைந்துவிட்டதாக கூறியிருக்கிறார். உடனே ரயில்வே பாதுகாப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் அவரை அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து ரவிக்குமார் கூறிய அடையாளங்களை வைத்து அந்த கைப்பை அவருடையதுதான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
அந்த கைப்பையில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம், செல்போன் ஆகியவை பயணியிடம் பத்திரமாக ரயில்வே போலீஸார் பத்திரமாக ஒப்படைத்தனர்.