ஏத்தர் அறிமுகப்படுத்திய கான்செப்ட் டூவிலர்கள்! Ather EL 01 & Ather Redux
காதலியை கைவிட்ட காதலன்; தற்கொலையை தடுத்து நிறுத்தியவரை மணந்த பெண் - டெஸ்ட் வைக்கும் தந்தை!
காதல் கோட்டை படத்தில் நடிகை தேவயானி தனது காதலனை தேடி வீட்டை விட்டு புறப்பட்டது போன்று நிஜத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ஸ்ரத்தா திவாரி என்ற இளம்பெண் சர்தக் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதற்காக இருவரும் வீட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவு செய்திருந்தனர். ஸ்ரத்தா தனது வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் இந்தூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். ரயில் நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தார். ஆனால் காதலன் வரவில்லை. காதலனுக்கு போன் செய்து பேசியபோது, `தனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் ஆசை இல்லை’ என்று கூறிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரத்தா தான் வீட்டைவிட்டு ஓடிவந்துவிட்டதாக தெரிவித்தார்.

ஆனால் தன்னால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதனால் மனமுடைந்த ஸ்ரத்தா என்ன செய்வது என்று தெரியாமல் ரயில் நிலையத்தில் நின்ற ஒரு ரயிலில் எங்கு செல்கிறது என்பதைக்கூட கேட்காமல் அதில் ஏறி சென்றார். ரயில் ரத்லம் ரயில் நிலையம் சென்றது. அங்கு இறங்கி எங்கு செல்வது என்று தெரியாமல் ஸ்ரத்தா நின்று கொண்டிருந்தார். ரயில் நிலையத்தில் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் அங்குள்ள இருக்கையில் அமர்ந்திருந்தபோது ஸ்ரத்தா படித்த கல்லூரியில் எலக்ட்ரீயனாக வேலை செய்யும் கரன் தீப் என்பவர் அவரை பார்த்தார்.
ஸ்ரத்தாவிடம் கரன் ஏன் இங்கு இருக்கிறாய் என்று கேட்டபோது நடந்த விசயத்தை தெரிவித்தார். அதனை கேட்ட கரன் மீண்டும் பெற்றோர் வீட்டிற்கு செல்லும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் திருமணம் செய்து கொள்ளத்தான் வீட்டை விட்டு ஓடி வந்தேன் என்றும், திருமணம் செய்யாமல் சென்றால் என்னால் உயிரோடு இருக்கமுடியாது என்று ஸ்ரத்தா சொன்னார்.
ஸ்ரத்தாவிடம் கரன் எவ்வளவோ பேசிப்பார்த்தும் தனது முடிவில் ஸ்ரத்தா உறுதியாக இருந்தார். இதனால் வேறு வழியில்லாமல் கரன், `நான் வேண்டுமானால் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று தெரிவித்தார். வேறு வழியில்லாமல் ஸ்ரத்தா அதனை ஏற்றுகொண்டார். இதையடுத்து இருவரும் அங்குள்ள சிவன் கோயிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். அங்கிருந்து மான்செளர் என்ற ஊருக்கு சென்றனர். அங்கு சென்ற பிறகு ஸ்ரத்தா தனது தந்தைக்கு போன் செய்து பேசினார். தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து ஸ்ரத்தாவின் தந்தை கரனுக்கு பணம் அனுப்பி ரயிலில் டிக்கெட் எடுத்து உடனே ஊருக்கு திரும்பும்படி கேட்டுக்கொண்டார். ஸ்ரத்தாவின் தந்தை அனில் திவாரி தனது மகளை காணாமல் பல இடங்களில் தேடினார். மகளை பற்றி தகவல் கொடுத்தால் 50 ஆயிரம் சன்மானம் கொடுப்பதாகவும் அறிவித்து இருந்தார். அதோடு தனது மகளின் புகைப்படத்தை வீட்டிற்கு வெளியில் தொங்கவிட்டு தகவல் கொடுத்தால் 50 ஆயிரம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இருவரும் இந்தூர் வந்தது குறித்து அனில் கூறுகையில், ''கரனையும், ஸ்ரத்தாவையும் 10 நாட்களுக்கு கண்காணிப்போம். அதன் பிறகும் கரனுடன் தான் வாழ்வேன் என்று ஸ்ரத்தா சொன்னால் இத்திருமணத்தை ஏற்றுக்கொள்வோம்'' என்று தெரிவித்தார். தம்பதியினர் இருவரும் உள்ளூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலமும் கொடுத்துள்ளனர். காதல் கோட்டை படத்தில் தேவயானி தேடிவந்த காதலன் கடைசி நேரத்தில் கிடைப்பார். ஆனால் இங்கு காதலனுக்கு பதில் வேறு ஒருவரை ஸ்ரத்தா விருப்பப்பட்டு திருமணம் செய்துகொண்டுள்ளார்.