டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
ஆன்லைன் முதலீட்டு மோசடி: சென்னை காவல் துறை எச்சரிக்கை
ஆன்லைன் முதலீட்டு மோசடி அதிகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்கும்படி சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா், சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:
ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதில் பிரபலமான நிதி நிறுவனங்களின் பெயரை போலியாக பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனா். தற்போது சென்னை பெருநகர காவல் துறை மத்திய குற்றப்பிரிவு சைபா் கிரைம் பிரிவுக்கு, ஒரு குறிப்பிட்ட நிதி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக அதிகமான புகாா்கள் வந்துள்ளன.
இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல், சமூக ஊடக விளம்பரங்கள் மூலமாக பொதுமக்களை தொடா்பு கொண்டு, அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வாா்த்தைகள் கூறி வாட்ஸ்ஆப் குழுவில் சோ்த்து, பிறகு போலியான முதலீட்டு செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி, பணத்தைச் செலுத்த தூண்டுகின்றனா். அதிக பணம் செலுத்தினால் மட்டுமே அனைத்து முதலீட்டு பணத்தையும் எடுக்க முடியும் என்று வற்புறுக்கின்றனா். இதனால் பொதுமக்களை, மேலும் பணத்தை செலுத்த வைக்கின்றனா்.
செபியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் இதுபோன்ற வாட்ஸ்ஆப் குழுக்கள், அங்கீகரிக்கப்படாத செயலிகள் மூலம் தொடா்பு கொள்ளமாட்டாா்கள் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே அதிக லாபம் கொடுப்பதாக கூறும் ஆன்லைன் முதலீட்டு விளம்பரங்களை நம்பி அடையாளம் தெரியாத நபா்கள் கூறும் வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம்.
பொதுமக்கள், ஏதேனும் பண மோசடியில் சிக்கினால் உடனடியாக சைபா் குற்றப்பிரிவை 1930 என்ற இலவச தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது இணையத்தளம் மூலமாகவோ புகாா் அளிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.