தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றார் வெங்கடராமன்!
தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் இன்று (ஆக. 31) பொறுப்பேற்றார்.
தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, டிஜிபி பொறுப்புகளை வெங்கடராமனிடம் வழங்க, கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய டிஜிபியாக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழக காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக இருக்கும் வெங்கடராமனுக்கு, கூடுதல் பொறுப்பாக சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பணியும் வழங்கப்பட்டுள்ளது.
ஜி. வெங்கடராமன் யார்?
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வெங்கடராமன், கடந்த 1968ஆம் ஆண்டு மே 8-ஆம் தேதி பிறந்துள்ளார். இளநிலை பொருளாதார பட்டபடிப்பும், முதுநிலை பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை பட்ட மேற்படிப்பும் படித்துள்ளார்.
இதன் பின்னர் கடந்த 1994-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற வெங்கடராமன், தமிழக காவல்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.
முக்கியமாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜி, ஐஜி பொறுப்புகளில் திறம்பட பணியாற்றினார். இதன் பின்னர், சிபிசிஐடி, சைபர் குற்றப்பிரிவு ஏடிஜிபி பொறுப்புகளிலும் பல்வேறு முக்கியமான வழக்குகளில் துப்பு துலக்கி தீர்வு கண்டார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற வெங்கடராமன், நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வந்தார். சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பொறுப்புடன், தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் பணியையும் வெங்கடராமன் கவனிப்பார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்ட வெங்கடராமனுக்கு தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே கடந்த 2011 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தமிழக காவல்துறையில் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பதவியை பொறுப்பு பணியாக கே.ராமானுஜமும், 2017 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் டி.கே.ராஜேந்திரனும் கவனித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிக்க | 50% வரி: பொருளாதார பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை தேவை - விஜய்