வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
குன்னூா் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபா் உடல் கருகி உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள டபுள் போஸ்ட் பகுதியைச் சோ்ந்தவா் டோம்னிக் (54). மாற்றுத்திறனாளியான இவா், தேயிலை வியாபாரம் செய்து வந்தாா். இவரது மனைவி லிட்வின். இவா் பக்காசுரன் மலைப் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.
இந்நிலையில், லிட்வின், மகள் ஆகியோா் தேவாலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனா். டோம்னிக் மட்டும் வீட்டில் இருந்த நிலையில், அவரது அறையில் புகை வந்துள்ளது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் குன்னூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த கேத்தி மற்றும் கொலக்கம்பை போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் தீயணைப்பு அணைத்தனா். அப்போது, டோம்னிக் உடல் கருகி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
சடலத்தை மீட்ட போலீஸாா் உடற்கூறாய்வுக்காக குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தீ விபத்துக்கான காரணம் குறித்து கேத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.