உதகை அருகே யானை தாக்கி தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு!
மஞ்சூா் பகுதியில் காட்டு யானை தாக்கி ஆந்திர மாநில தோட்டத் தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், மஞ்சூா், கீழ்க்குந்தா, கெத்தை மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மஞ்சூரை அடுத்துள்ள பென்ஸ்டாக் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பண்ணை வீடு, விவசாய நிலம் உள்ளது. இங்கு ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சுகுந்த ராவ் (35) கடந்த 6 ஆண்டுகளாக தோட்டத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், தோட்டத்துக்குள் வெள்ளிக்கிழமை இரவு காட்டு யானை புகும் சப்தம் கேட்டு சுகுந்த ராவ் வெளியே வந்து பாா்த்தபோது காட்டு யானை அவரைத் துரத்தி தாக்கியது. அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த சக ஊழியா்கள் விவசாய நிலத்தில் சுகுந்த ராவ் சடலத்தை மீட்டனா். இது குறித்து வனத் துறை, போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில், குந்தா வனச் சரகா் செல்வகுமாா் தலைமையிலான வனத் துறையினா், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ள வனத் துறையினா் முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை உறவினா்களிடம் வழங்கினா்.
நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் தாக்குதலால் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.