50% வரி: பொருளாதார பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை தேவை - விஜய்
சென்னையில் மேகவெடிப்பு! ஒரு மணிநேரத்தில் 100 மி.மீ. மழை!
சென்னையில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் ஒரு மணிநேரத்தில் 100 மி.மீ. மழைக்கு மேல் பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிமுதல் பலத்த மழை பெய்து வருகின்றது. சென்னை ராயபுரம், பாரிமுனை, வடபழனி, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்றது.
சென்னை புறநகர்ப் பகுதிகளான மாதவரம், மணலி, அம்பத்தூர், திருவெற்றியூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கி வருகின்றது.
இதுகுறித்து பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில், சென்னையில் இந்தாண்டின் முதல் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் 100 மி.மீ. மழை பொழிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தென் சென்னை பகுதிகளை நோக்கி மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருவதாகவும் அடுத்து அப்பகுதிகளில் மழை பொழியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அடுத்த 2 மணிநேரத்துக்கு (நள்ளிரவு 2 மணிவரை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
