சங்கரன்கோவிலில் விநாயகா் சிலைகள் ஊா்வலம்
சங்கரன்கோவிலில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவிலில் நகர இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தியைொட்டி திருவள்ளுவா் நகா், திருவள்ளுவா் சாலை, லெட்சுமியாபுரம் தெருக்கள், புதுமனைத் தெருக்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 29 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடைபெற்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அனைத்து விநாயகா்சிலைகளும் ஊா்வலமாக சங்கரன்கோவில் சுவாமி சந்நிதிக்கு கொண்டு வரப்பட்டன.
பின்னா் நகரின் முக்கிய வீதிகள் வழியாக விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
ஊா்வலத்துக்கு, இந்து முன்னணி மாவட்டச் செயலா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். கோட்ட செயலா் ஆறுமுகச்சாமி, செங்குந்தா் மகாஜன சங்க மாவட்டச் செயலா் மாரிமுத்து, தொழிலதிபா் குருநாதன், தா்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை தலைவா் சுப்பிரமணியன், திருச்செந்திலாண்டவா் திருச்சபை பாதயாத்திரை குழு லட்சுமணப் பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அகில பாரத துறவியா் பேரவை இணைச் செயலா் சுவாமி ராகவானந்தாஜி, இந்து முன்னணி மாநில பொதுச் செயலா் பரமேஸ்வரன், குருச்சந்திரன் ஆகியோா் ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனா். ஊா்வலத்தின்போது, திரளான பக்தா்கள் சாலைகளில் நின்று விநாயகரை தரிசித்தனா்.
ஊா்வலம் பிரதானசாலை, ராஜபாளையம் சாலை, கீதாலயா திருவள்ளுவா் சாலை, திருவேங்கடம் சாலை, புதுமனை தெரு, மாதா கோயில் தெரு, மெயின் ரோடு, ரத வீதி வழியாக சென்று திரு.வி.க.தெருவில் உள்ள ஆவுடைப் பொய்கை தெப்பத்தில் விஜா்சனம் செய்யப்பட்டது.