ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!
``எடப்பாடி முதல்வராக அண்ணாமலை உயிரை கொடுக்க வேண்டாம்; பாஜகவினரை தூண்டினாலே போதும்'' - செல்லூர் ராஜூ
"எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்கு அண்ணாமலை உயிரைக் கொடுக்க வேண்டாம், பாஜகவினரை தூண்டினால் போதுமானது" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பிரசாரப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பிரசார வாகனத்தை முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ கூறியதாவது:
"மதுரை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அதிமுக ஆட்சி காலத்தில் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்த தர்ம பிரபுவாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.
காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மதுரை மாநகரப் பகுதிகளில் போஸ்டர் ஒட்டக்கூடாது என மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊழல் நிறைந்த மாநகராட்சியில் இத்தகைய தீர்மானங்களை கொண்டு வருவது வேடிக்கையாக உள்ளது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவதற்கு உயிரைக் கொடுத்து உழைப்போம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால் அவர் உயிரையே கொடுக்க வேண்டியதில்லை; பாஜகவினரை தூண்டினாலே போதுமானது. 2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்" என்றார்.