லண்டனிலும் தமிழக வளர்ச்சிக்கான முதலீட்டாளர் சந்திப்பு: முதல்வர் ஸ்டாலின்
Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என்ன?
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31), ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள பகுதி ஆகும்.
இந்த நிலநடுக்கம், ஆப்கானிஸ்தானின் உள்ளூர் நேரப்படி, இரவு 11:47 மணிக்கு ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று முன்பு கணிக்கப்பட்டிருந்தது.

நேற்று, ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் சபிபுல்லா முஜாஹித் கூறும்போது, “ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,400-ஐ தாண்டியுள்ளது. மேலும், 3,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது குனார் மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை மட்டுமே” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனுடன், இன்னும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏன் இவ்வளவு உயிரிழப்புகள்?
இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்கானிஸ்தான் பொறுப்பாளர் இந்த்ரிகா ரத்வட்டே, AP செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
“களிமண் மற்றும் மரத்தால் கட்டப்பட்ட வீடுகளின் சுவர்கள் இடிந்து, வீட்டிற்குள் இருந்தவர்களின் மீது விழுந்துள்ளது. அதுவே அதிக உயிரிழப்புகள் மற்றும் காயங்களுக்கு காரணமாக உள்ளது.
அந்தப் பகுதியில் மக்கள் தொகை மிக குறைவே. ஆனால், நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் மக்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால், உயிரிழப்புகள் அதிகமாகி உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.