Bihar: `நள்ளிரவில் நடுரோட்டில் ஆட்டம்' - தேஜஸ்வி யாதவ் ரீல்ஸ்; கடுமையாக சாடிய பாஜக
இன்னும் சில மாதங்களில் பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் விரைவு திருத்தம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதைத் தொடர்ந்து கர்நாடகா, பீகார் போன்ற மாநிலங்களில் நடந்த வாக்குத் திருட்டு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும், மக்களின் வாக்குரிமையை மீட்கும் வகையில் வாக்காளர் அதிகார யாத்திரை என்ற யாத்திரையையும் மேற்கொண்டார்.
இந்த நிலையில், பீகார் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவருமான தேஜஸ்வி யாதவ், பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் உள்ள மரைன் டிரைவ் சாலையில் சில இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடி ரீல்ஸ் எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

எப்போது எடுக்கப்பட்டது?
16 நாள்களாக நடைபெற்ற 'வாக்காளர் அதிகார யாத்திரை' (Voter Adhikar Yatra) நிறைவடைந்த பிறகு எடுக்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில், தேஜஸ்வி யாதவ் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உரையாடினார்.
நீண்ட பயணம் மற்றும் அரசியல் பரபரப்புக்கு பிறகே இந்த இளைஞர்களை சந்தித்து வீடியோ எடுத்துள்ளார். நடனத்தைத் தொடர்ந்து அந்த இளைஞர்களுடன் டீ குடிப்பது, பேசிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
சாடும் பாஜக:
இந்த வீடியோ வைரலான நிலையில், பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக், “தேஜஸ்வி யாதவ் நடுநிசி நேரத்தில் சாலையில் நடனமாடி ரீல்ஸ் உருவாக்குவது ஒரு பொறுப்பற்ற செயல்.
இது சட்டவிரோத செயல்களை ஊக்குவிப்பதாக இருக்கிறது. சாலையில் ரீல்ஸ் எடுப்பதால் பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இது போன்ற செயல்களுக்கு எதிராக பீகார் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பாட்னாவின் மரைன் டிரைவ் "பிக்னிக் ஸ்பாட்" அல்ல. அங்கு இது போன்ற செயல்கள் அனுமதிக்கப்படக்கூடாது” எனச் சாடினார்.
sadak par khatarnaak reelbaazi ke virodh me protest karte yuva neta tejaswi yadav. ❤️ pic.twitter.com/6BC734kxbp
— Open Letter (@openletteryt) September 2, 2025
மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி, “தேஜஸ்வி யாதவ் போன்றோர் நள்ளிரவில் சாலையில் நடனமாடி மகிழ்வது, நிதீஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ ஆட்சியில் பீகார் ஒரு நல்ல நிர்வாகத்தைக் கொண்ட மாநிலமாக இருப்பதைக் காட்டுகிறது.
லாலு குடும்பம் ஆட்சியில் இருந்திருந்தால், இந்த இளைஞர்கள் துப்பாக்கியுடன் டிஸ்கோ நடனமாடியிருப்பார்கள். அது போன்ற "ஜங்கிள் ராஜ்" (காட்டு ஆட்சி) மீண்டும் வராமல் இருக்க, என்.டி.ஏ கூட்டணி அவசியம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.