``ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்'' - ஆடு, டிவி, அடுப்பு, பாத்திரங்கள...
``ஒன்றுபட்ட அதிமுக?'' - மனம் திறந்து பேசுவதாக அறிவித்த செங்கோட்டையன்: பின்னணி என்ன?
பனிப்போர்
அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான பனிப்போர் கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அன்னூரில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்காக நடத்தப்பட்ட பாராட்டு விழா அழைப்பிதழில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்கள் இல்லையென்ற குற்றச்சாட்டை முன்வைத்து, செங்கோட்டையன் அந்த விழாவைப் புறக்கணித்தார்.
அதைத் தொடர்ந்து, நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகளில் எதிலும் எடப்பாடி பழனிசாமியின் பெயரைக் குறிப்பிடாமல் செங்கோட்டையன் பேசியும் வந்தார்.
இதனால், செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
இந்நிலையில், ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் செங்கோட்டையன் தலைமையில் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.
கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் செங்கோட்டையன் பேசத் தொடங்கியபோது, "அந்தியூரைச் சேர்ந்த பிரவீன் என்பவர் எழுந்து, அந்தியூர் பகுதி அதிமுக நிர்வாகிகளை அழைக்காமல் கூட்டம் நடத்துவதாக சப்தம் போட்டார்.

இதனால், அங்கிருந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பிரவீனை தாக்கினர். பதிலுக்கு பிரவீனுடன் வந்திருந்தவர்களும் நாற்காலியைத் தூக்கி வீசினர்.
இதனால், செயல்வீரர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, நிலைமையை சரி செய்த செங்கோட்டையன், "தற்போது பிரச்னை செய்தவர் அதிமுக நிர்வாகியே இல்லை. இதற்கு மிக முக்கிய காரணம் அந்தியூரைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ இ.எம்.ராஜாதான்.
அவரது ஏற்பாட்டில்தான் இந்த நபர் இங்கு வந்து பிரச்னை செய்துள்ளார். கடந்த தேர்தலின்போது, அதிமுக-வுக்கு வாக்கு செலுத்தாதீர்கள் என்று பேசியவர் இ.எம்.ராஜா.
அந்த ஆடியோ என்னிடம் உள்ளது. அப்படிப்பட்ட துரோகத்தை செய்துவிட்டு இப்போது குழப்பத்தை ஏற்படுத்த ஆள்களை அனுப்பியுள்ளார். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். துரோகிகளுக்கு எல்லாம் இறைவன் தண்டனை தருவான் என்று தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

கட்சி நிர்வாகிகள் நியமனம்
கொங்கு பகுதியான ஈரோட்டில் மிக மூத்த நிர்வாகி செங்கோட்டையன். ஆனால், கட்சி நிர்வாகிகள் நியமனத்தின்போது அவரை ஆலோசிக்காமல் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்ற அதிருப்தி செங்கோட்டையனுக்கு உள்ளது.
அந்தியூரைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. இ.எம். ராஜாவை ‘அம்மா பேரவை’ மாநில இணைச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அண்மையில் நியமித்தார். இதுதொடர்பாக செங்கோட்டையனிடம் ஆலோசிக்கவில்லை. முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன் தனது உறவினர் என்பதால், அவரது பரிந்துரையை மட்டும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்கிறார்; செங்கோட்டையனை கண்டுகொள்வதில்லை.
இதனால், செங்கோட்டையன் தனது அதிருப்தியை வெளிக்காட்டத் தொடங்கியதாக பேச்சுகள் எழத் தொடங்கின. இதைத் தொடர்ந்து செங்கோட்டையன் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார்.
டெல்லி பயணம்
இதைத்தொடர்ந்து தில்லிக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். பின்னர் தில்லிக்குச் சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனியாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு செங்கோட்டையன் அமைதியாக இருந்து வந்தார்.

கருத்து வேறுபாடுகள்
எடப்பாடி பழனிசாமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் தனது பிரசாரப் பயணத்தை தொடங்கியபோது, எடப்பாடியில் இருந்து கோபிசெட்டிபாளையம் வழியாகவே மேட்டுப்பாளையத்துக்குச் சென்றார்.
அப்போது கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ. செங்கோட்டையன், கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு கோபிசெட்டிபாளையத்தில் வரவேற்பு அளிக்கவில்லை.
இவ்வாறு தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன.
செங்கோட்டையன் அறிவிப்பு
இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோவிலில் நடைபெற்ற திருமண விழாவில் செங்கோட்டையன் பங்கேற்றார். அப்போது அவர் கட்சி நிர்வாகிகளிடம், “5-ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் நான் மனம் திறந்து பேசுகிறேன்” என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து நேற்று தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் 5-ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நான் மனம் திறந்து பேசப் போகிறேன். அப்போது என்ன கருத்துகளை சொல்லப்போகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்வீர்கள். அதுவரை பொறுத்திருந்திருங்கள்” என்று கூறியது, அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் சலசலப்பு
இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவை வலுப்படுத்த சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற முயற்சியில் செங்கோட்டையன் இறங்கியுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, சசிகலாவை செங்கோட்டையன் ரகசியமாக சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் கட்சியில் இருந்து ஓரங்கட்டி வந்தார்.
கட்சியில் தனக்கான அங்கீகாரம் குறைந்ததை செங்கோட்டையன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை வெளிப்படுத்தும் விதமாகவே அவர் 5-ஆம் தேதி மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுவொரு புறம் இருக்க, எப்போதும் இல்லாத வகையில் செங்கோட்டையனின் அலுவலகத்தில் பெரியாரின் புகைப்படம் பெரிதாக இடம் பெற்றுள்ளது.
மற்றபடி, கட்சி மாற்றம் போன்ற பெரிய அளவிலான எந்த முடிவையும் அவர் எடுக்கமாட்டார் என்று நம்புகிறோம் என்றனர். செங்கோட்டையனின் இந்த அறிவிப்பு கொங்கு பகுதி அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.