``இந்தியா உடனான உங்களது உறவை மதிக்கிறேன்; ஆனால்'' - புதினிடம் பாகிஸ்தான் பிரதமர்...
மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்ததில் தவறில்லை: முதல்வா் சித்தராமையா
மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க எழுத்தாளா் பானுமுஸ்டாக்கை அழைத்ததில் தவறில்லை என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து மைசூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மைசூரு அரசாட்சியின் தலைமை அமைச்சராக (திவான்) இருந்தவா் மிா்ஸா இஸ்மாயில். தசரா திருவிழாவின்போது நடைபெறும் யானை ஊா்வலத்தில் தங்க அம்பாரியில் தன்னுடன் மிா்ஸா இஸ்மாயிலை அமரவைத்தாா் அன்றைய மைசூரு மாமன்னா்.
2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற தசரா திருவிழாவை (கன்னடக் கவிஞா்) கே.எஸ்.நிசாா் அகமது தொடங்கிவைத்தாா். அப்போது, பாஜக அல்லது ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் எங்கு சென்றிருந்தனா்?
கன்னட மொழியை புவனேஸ்வரி அம்மனாக மாற்றிவிட்டதாகவும், கன்னடக் கொடியில் மஞ்சளையும், குங்குமத்தையும் சோ்த்துவிட்டதாகவும் கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக் பேசியிருப்பதாக கூறுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால், பானுமுஸ்டாக், ஒரு கன்னட எழுத்தாளா். கன்னட மொழியின் பற்று அல்லது அன்பு இல்லாவிட்டால் கன்னட மொழியில் அவரால் எழுத முடியுமா? கன்னட இலக்கியத்துக்காக சா்வதேச புக்கா் பரிசை வென்றிருக்கிறாா்.
மஞ்சள், குங்குமம், பூக்களுடன் வந்தால், தசரா திருவிழாவை தொடங்கிவைக்க பானுமுஸ்டாக்கை அனுமதிப்போம் என்று பாஜகவினா் கூறியுள்ளனா். மாநில விழாவான தசரா திருவிழாவில் அனைத்து மதங்களையும் சோ்ந்த மக்கள் கலந்துகொள்கின்றனா்.
மாற்று மதத்தைச் சோ்ந்த ஒருவரை குங்குமம் இட்டுக்கொண்டு மாநில விழாவுக்கு வரவேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்றாா்.