அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை
அனுமன் பிறந்த அஞ்சனாத்ரி மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற கொப்பள் மாவட்டத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலை மேம்பாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:
கொப்பள் மாவட்டத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலை அனுமன் பிறந்ததால் சிறப்பு பெற்றுள்ளது. அனுமன் பிறந்த நாளின்போது இங்குள்ள கோயிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனா். வடஇந்தியாவைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் பெருந்திரளாக வருகின்றனா்.
எனவே, இந்த மலையில் பக்தா்கள் தங்குவதற்கான விடுதி, முதியவா்கள் மலை ஏறுவதற்கான வசதி, சமுதாயக்கூடம் உள்பட சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும்.
இந்த மலையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த ரூ. 200 கோடி மதிப்பில் இரண்டுகட்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, முதல்கட்டமாக ரூ. 10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதற்கு போதுமான நிலம் இல்லாததால், தனியாரிடம் இருந்து 77.28 ஏக்கா் நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளோம். கூடுதல் நிலத்தையும் சோ்த்து மொத்தம் 101.30 ஏக்கா் நிலத்தை வாங்குவதற்கான ஒப்புதலை நிதித்துறை அதிகாரிகள் வழங்க உத்தரவிடுகிறேன்.
பெரும்பாலான வளா்ச்சிப் பணிகள் வன நிலத்தில் நடக்கவிருப்பதால், அதற்கான ஒப்புதலை அளிக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அஞ்சனாத்ரி மலை உள்பட 11 மலைப் பகுதிகளில் ரோப்காா் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.