மோடி வெட்கித் தலைகுனிய வேண்டும்: ராகுல்
மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூர் அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து இரண்டு பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்து இரண்டு குழந்தைகள் பலியாகியுள்ளனர். இது விபத்து அல்ல; அப்பட்டமான கொலையே. இந்த சம்பவம் கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்றது. இதனைக் கேட்டதும் உடலெல்லாம் நடுங்குகிறது.
தனது அடிப்படைப் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய அரசாங்கத்தால், ஒரு தாயின் மடியில் இருந்து குழந்தை பறிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை, வேண்டுமென்றே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், இனி ஏழைகளின் உயிர்காக்கும் மருத்துவமனைகளாக இல்லை; அது பணக்காரர்களுக்கு மட்டுமே. அரசு மருத்துவமனைகள் மரணத்தின் குகைகளாக மாறிவிட்டன.
எப்போதும்போல, விசாரணை நடத்தப்படும் என்றுதான் நிர்வாகம் கூறுகிறது. ஆனால் கேள்வி என்னவென்றால் - புதிதாய் பிறந்த குழந்தைகளின் பாதுகாப்பைக்கூட நீங்கள் உறுதிசெய்ய முடியாதபோது, அரசாங்கத்தை எப்படி நடத்துவீர்கள்? என்ன உரிமை இருக்கிறது?
பிரதமர் மோடியும், மத்திய பிரதேச முதல்வரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். நாட்டிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளின் சுகாதார உரிமையை உங்கள் அரசு பறித்துள்ள நிலையில், தற்போது தாய்மார்களின் மடியில் இருந்து குழந்தைகளும் பறிக்கப்படுகிறார்கள்.
பிரதமர் மோடி அவர்களே, இன்று அரசின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான பெற்றோர்களின் சார்பாக இந்தக் குரல் எழுப்பப்படுகிறது. உங்கள் பதில் என்ன?
இந்தப் போராட்டமானது, ஒவ்வொரு ஏழைக்கும் ஒவ்வொரு குடும்பம் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் உரிமைகளுக்கானது என்று தெரிவித்துள்ளார்.
இந்தூரில் உள்ள மஹாராஜா யஷ்வந்த் ராவ் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த 2 பச்சிளம் குழந்தைகளை ஆக.31 மற்றும் செப்.1 ஆகிய இருநாள்களின் நள்ளிரவில் ஒன்றன் பின் ஒன்றாக எலி கடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இரு குழந்தைகளும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாள்களில் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.