பார்க்கும் வேலை நரகமாக இருக்கிறதா? காரணம் இதுதான் - Guru Mithreshiva | Ananda Vi...
அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: அமல்படுத்த உத்தரவு!
தமிழக அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை அமல்படுத்த சென்னை சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007 முதல் 2009 வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்து சேர்த்ததாக 2011 ஆம் ஆண்டு துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் இருந்து துரைமுருகன் மற்றும் சாந்தகுமாரியை வேலூர் நீதிமன்றம் விடுவித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் 2017 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.
தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம் விசாரணைக்கு நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
அமைச்சர் துரைமுருகன் ஆஜராகாத நிலையில், அவரது மனைவி நேரில் ஆஜராகி பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரினார்.
இதையடுத்து, சாந்தகுமாரிக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்த நீதிமன்றம், துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட்டை செப். 15 ஆம் தேதி அமல்படுத்த தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது.