காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: நவ. 30-க்குள் அமல்படுத்த உத்தரவு!
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை நவ. 30-க்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மது அருந்துபவா்கள் மதுபாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. இதை தடுக்கும் விதமாக காலி மதுபாட்டில்களை மதுக்கடையில் திரும்பப் பெறும் திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த திட்டம் வனம் மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றில் வனப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வீசியெறியும் காலி மதுபான பாட்டில்களால் விவசாயிகள், சாலைகளில் நடந்து செல்வோர் மற்றும் கால்நடைகள், விலங்குகள் பாதிக்கப்பட்டுவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்படுவதாகக் கருதிய நீதிமன்றம், டாஸ்மாக் நிர்வாகத்திடம் இதை தடுக்கும் விதமாக ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டுமென உத்தரவிட்டது.
இதையடுத்து, டாஸ்மாக் நிா்வாகம் கடைகளில் மதுபாட்டிலை விற்பனை செய்யும்போது, பாட்டிலை அதிகபட்ச விலையோடு கூடுதலாக ரூ.10 நுகர்வோரிடம் பெற்று, அந்த காலி பாட்டிலை கடையில் திருப்பி அளிக்கும்போது, ரூ.10-ஐ திருப்பி அளிக்கும் திட்டத்தைச் சமர்ப்பித்தது. இந்தத் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
முதல்கட்டமாக, நீலகிரி, நாகை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 2-ஆம் கட்டமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலுார், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில், காலி மதுபாட்டிகளை திரும்பப் பெறும் திட்டம் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று(செப். 4) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை 15 மாவட்டங்களில் முழுமையாகவும், 7 மாவட்டங்களில் பகுதியளவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாட்டில்களை விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 25 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது, இந்தத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த அவகாசம் அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் நவம்பர் 30ம் தேதிக்குள் இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்.10-க்கு ஒத்திவைத்தது.
இதையும் படிக்க: பங்குச் சந்தையில் ஜிஎஸ்டி எதிரொலி? ஆட்டோ, எஃப்எம்சிஜி பங்குகள் உயர்வு!