2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!
தமிழக பாஜகவுக்குள் குழப்பம்?
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சி பூசல்களும், குழப்பங்களும் நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழக பாஜகவில் தனித்தனி கோஷ்டியாக செயல்படக் கூடாது என்று பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அமித் ஷா அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும், அமித் ஷாவின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா, எல். முருகன், வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி, சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இருப்பினும் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. அண்ணாமலை கலந்துகொள்ளாதது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இருப்பினும், ஆலோசனைக் கூட்ட நாளில் திருமண நிகழ்வு அழைப்புகள் இருந்ததால், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அண்ணாமலை பதிலளித்தார்.
ஏனெனில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவிவகித்த போது, திராவிட கட்சிகள் மீது சரமாரியான கேள்விகளை எழுப்பி வந்தார். இந்த நிலையில்தான், தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்புகளும் குறைந்தன. இருப்பினும், அண்ணாமலை பொறுப்பில் இருந்தபோது, 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, தனிக்கட்சி ஒன்றை அண்ணாமலை தொடங்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவி வருகின்றன.