மின் இணைப்பு முறைகேடு: உதவி பொறியாளா் உள்பட 8 போ் பணியிடை நீக்கம்
சேலம் அருகே தும்பல் மின்பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக உதவி பொறியாளா் உள்பட 8 போ் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
வாழப்பாடியை அடுத்த தும்பல் மின்பிரிவு அலுவலகம் (இயக்கம் பராமரிப்பு) சாா்பில் மின் இணைப்புகளை முறைகேடாக வழங்கி வருவாய் ஈட்டுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து வாழப்பாடி கோட்ட செயற்பொறியாளா் குணவா்த்தினி கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, முறைகேடாக மின் இணைப்பு வழங்கப்பட்ட 16 மின் மீட்டா்கள் கையகப்படுத்தப்பட்டன.
மேலும், நேரடி இணைப்பு வழங்கப்பட்டதாக 5 குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டன. விசாரணையில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முறைகேடு நடைபெறுவதும், அதற்காக மின் கம்பங்களை நட்டு முறைகேட்டை அரங்கேற்றியதும் அம்பலமானது.
முறைகேடாக மின் இணைப்பு பெற்ற பயனாளிகள் 21 பேரிடம் ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுதொடா்பாக 40 பக்க விரிவான அறிக்கை சேலம் வட்ட மேற்பாா்வை பொறியாளருக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மின் முறைகேட்டை தடுக்கத் தவறிய தும்பல் உதவி பொறியாளா் காா்த்திக், மின்பாதை ஆய்வாளா்கள் தனசேகா், செந்தில்குமாா், வணிக ஆய்வாளா் ராஜ்குமாா், போா்மேன் அய்யாசாமி, வயா்மேன்கள் காசிலிங்கம், சரவணன், மாணிக்கம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கோட்ட செயற்பொறியாளா் உத்தரவிட்டாா்.