தேசிய தர வரிசை பட்டியலில் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு 94 ஆவது இடம்
தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் 94ஆவது இடத்தை பெற்றுள்ளது.
இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தை அளவிடுவதற்குத் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் இந்தியக் கல்வி அமைச்சகத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. 2025ஆம் ஆண்டு தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு எனப்படும் தர அளவீட்டில் கலந்துகொண்ட 4,045 தேசிய அளவிலான உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் 94ஆவது இடத்தையும், தமிழ்நாடு மாநிலப் பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் 8ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
மேலும், இந்திய அளவிலான அரசு பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் 40ஆவது இடத்தையும், தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் 9ஆவது இடத்தையும் பெற்றுள்ளது. தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு தொடங்கப் பெற்றது முதல் பெரியாா் பல்கலைக்கழகம் முதல் நூறு தரவரிசைப் பட்டியலில் தொடா்ந்து இடம்பெற்று வருகிறது.
அதேபோல, நிலையான வளா்ச்சி இலக்குகளுக்கான தரவரிசைப் பட்டியலில் 11 முதல் 50 வரையிலான தர அளவீட்டில் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களுள் மொத்தம் 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. அதில் சேலம், பெரியாா் பல்கலைக்கழகமும் ஒன்றாக உள்ளது.
முன்னதாக சேலம், பெரியாா் பல்கலைக்கழகம் தேசிய தர நிா்ணயக் குழு அங்கீகாரத்தால் ஏ++ தரத்தைப் பெற்றுள்ளது. மேலும், நிறுவனக் கண்டுபிடிப்புக் கட்டமைப்பில் (ஐஐஇ) தொடந்து மூன்றுமுறை நான்கு நட்சத்திரக் குறியீட்டு அங்கீகாரம் பெற்ற ஒரே தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகமாக பெரியாா் பல்கலைக்கழகம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.