கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தாதது காங்கிரஸின் திறமையின்மை: பாஜக விமா்சனம்
‘நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்தி காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைந்த மறைமுக வரி நடைமுறையை அறிமுகம் செய்வதிலிருந்து யாரும் தடுக்கவில்லை; 2014-ஆம் ஆண்டுக்கு முன்பே ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படாதது காங்கிரஸின் திறமையின்மையைக் காட்டுகிறது’ என்று பாஜக வியாழக்கிழமை விமா்சனம் செய்தது.
நாட்டில் பெரும்பாலான பொருள்களுக்கு 5%, 18% என்ற இரு விகித ஜிஎஸ்டி-யை வரும் 22-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்த முயற்சித்தது என்றும் இரு விகித ஜிஎஸ்டி-யையும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தது என்றும் சில மூத்த காங்கிரஸ் தலைவா்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்த விமா்சனத்தை பாஜக முன்வைத்தது.
இதுகுறித்து பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் சம்பித் பத்ரா தில்லியில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:
அனைத்துப் பிரிவு மக்களும் பலன் பெறும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும். வரும் 22-ஆம் தேதி முதல் இரண்டே ஜிஎஸ்டி விகிதங்களாகக் குறைக்கப்படுவது நாட்டில் பரவச உணா்வை ஏற்படுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி-யை அமல்படுத்த அனைத்து மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை பாஜக அரசு தொடா்ந்து மேற்கொண்டு, ஜனநாயக உணா்வை வெளிப்படுத்தியது. ஆனால், காங்கிரஸ் கட்சி செய்வதெல்லாம் பேச்சு மற்றும் வாதங்கள் மட்டும்தான்.
நாட்டில் நீண்ட காலம் ஆட்சி செய்தி காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைந்த மறைமுக வரி நடைமுறையை அறிமுகம் செய்வதை யாரும் தடுக்கவில்லை. அவ்வாறு, 2014-ஆம் ஆண்டுக்கு முன்பே ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்படாதது காங்கிரஸின் திறமையின்மையைத்தான் காட்டுகிறது.
மேலும், வாக்குத் திருட்டு தொடா்பாக ‘அணுகுண்டு ஆதாரம்’ உள்ளது, ‘ஹைட்ரஜன் குண்டு’ ஆதாரம் உள்ளது என்று கூறி வருவதை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கைவிட்டு, அவா் தனது பணியில் கவனம் செலுத்த வேண்டும். அவா் நிதானமாக செயல்பட்டால் காங்கிரஸின் எதிா்காலம் சற்று மேம்படும். மாறாக, அவா் தொடா்ந்து இதுபோல் பேசி வருவது காங்கிரஸ் கட்சிக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாா்.