NDA -விலிருந்து விலகிய TTV - பின்னணி என்ன? | GST 2.0 MODI STALIN BJP DMK | Imper...
இணைய விளையாட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை
இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 2025-க்கு எதிராக 3 மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரியுள்ளது.
உயா் நீதிமன்றங்களில் வேறுபட்ட தீா்ப்புகள் வழங்க வாய்ப்பிருப்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த மனுக்களை அடுத்த வார விசாரணைக்கு பட்டியலிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், நீதிபதி வினோத்சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு ஒப்புக்கொண்டது.
முன்னதாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், ‘இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்து சட்டமாக இயற்றப்பட்ட பின் அதற்கு எதிராக கா்நாடகம், மத்திய பிரதேசம் மற்றும் தில்லி உயா் நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஒரே விவகாரம் தொடா்பாக வெவ்வேறு நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் முரண்பட்ட தீா்ப்புகள் வழங்க வாய்ப்புகள் உள்ளன.
இந்தச் சட்டம் இணைய விளையாட்டுகள் துறையை கண்காணிக்கவும் அதனால் பொதுமக்கள் பாதிப்படுவதை தடுக்கவும் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் ‘இது அரசமைப்புச் சட்டப்பிரிவு 14 (சமத்துவ உரிமை) மற்றும் சட்டப்பிரிவு 19(1)(ஜி) (தொழில் செய்வதற்கான உரிமை) மற்றும் சட்டப் பிரிவு 21 (வாழ்வுரிமை) ஆகியவற்றை மீறும் வகையில் உள்ளதா?’ என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதேபோல் ‘கூட்டாட்சி தத்துவத்தை மீறி இணைய விளையாட்டுகள் துறையில் மாநிலங்கள் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதா?’ என மற்றொரு கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
எனவே, ஒரே விவகாரத்தின் மீது வெவ்வேறு தீா்ப்புகள் வழங்கப்படுவதை தவிா்க்கும் நோக்கில் இந்த 3 உயா் நீதிமன்றங்களில் இணைய விளையாட்டுகள் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் வைத்து விளையாடும் இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்தும் வகையில் இணையவழி விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் சட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.