Doctor Vikatan: குடலைச் சுத்தப்படுத்த விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்வது சரியா?
செம்மஞ்சேரி காவல் நிலையத்தை இடமாற்றம் செய்வது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவு
செம்மஞ்சேரி காவல் நிலையத்தை அதே பகுதியில் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு மூன்று வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அறப்போா் இயக்கம் சாா்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாமரைக்கேணி ஏரியை ஆக்கிரமித்து செம்மஞ்சேரி காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. மேய்க்கால் புறம்போக்கு என அறிவித்து காவல் நிலையத்தைக் கட்டியுள்ளனா். சிஎம்டிஏ ஒப்புதல் பெறாமல் இந்த காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
எனவே, நீா்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும். காவல் நிலையக் கட்டடத்தை இடித்துவிட்டு நீா்நிலையை பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், 1987-ஆம் ஆண்டு பதிவேடுகளை சமா்ப்பித்து, அந்த ஆவணங்களில் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் மேய்க்கால் சாலை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என வாதிட்டாா்.
இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆவணங்களில் பல ஆண்டுகளாக மேய்க்கால் தாங்கல் சாலை எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலம், 1987-ஆம் ஆண்டு பதிவேட்டில் 61 ஹெக்டோ் மேய்க்கால் சாலை என வகைமாற்றம் செய்யப்பட்டது எப்படி? எந்த உத்தரவின் அடிப்படையில் அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டது? என்று கேள்வி எழுப்பினா்.
பின்னா், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் நிபுணா் குழு அறிக்கையின் அடிப்படையில் அந்த நிலம் நீா்நிலை என்பது தெளிவாகிறது.
எனவே, செம்மஞ்சேரி காவல் நிலையத்தை அதே பகுதியில் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்வது குறித்து தமிழக அரசு மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.