பறவை மோதல்! விஜயவாடாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து!
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயவாடா விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மீது கழுகு மோதியதால், அதன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விஜயவாடாவில் இருந்து பெங்களூரு நோக்கி, இன்று (செப்.4) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று 90 பயணிகளுடன் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த விமானம் ஓடு பாதையில் புறப்பட தயாராகி ஓடத் துவங்கியது. அப்போது, கழுகு ஒன்று அந்த விமானத்தின் மூக்கு பகுதியில் மோதியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு அந்தப் பயணமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் அனைவருக்கும் தங்களது பயணத்தைத் தொடர மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்து முழு பணத்தையும் திரும்பப் பெறலாம் அல்லது நிறுவனம் வழங்கும் வசதிகளை பெற்று மாற்று வழியில் தங்களது பயணத்தைத் தொடரலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவதே பேரழிவுக்கு காரணம்: உச்ச நீதிமன்றம்