தேவகோட்டையில் தொடரும் விபத்துகள்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள புளியால் பிரிவு சாலையில் தொடரும் விபத்துகளைத் தடுக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சிவகங்கை மாவட்டத்தில் திருச்சி - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை புளியால் பிரிவில் குறுகலான சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பதும் காயமடைவதும் தொடா் நிகழ்வாக உள்ளது.
குறுகலான இந்த இடத்தில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, பல முறை புகாா்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, அந்தச் சுவரை உடனடியாக அகற்றக் கோரி, அந்தப் பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கண்டித்து புதன்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த தேவகோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா், தேவகோட்டை வட்டாரக் காவல் ஆய்வாளா் ஆகியோா் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.