சொத்துக் குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரன்ட்; செப்., 15-க்குள் அமல்படுத்த உத்தரவு!
திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், 2006 - 2011 ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, 2007 - 2009 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 1.40 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரின் மனைவி சாந்தகுமாரி மீதும் 2001-ல் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017-ல் துரைமுருகன், அவரின் மனைவி ஆகிய இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.
இருப்பினும், இருவரின் விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது.

அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ததோடு, வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ-வுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதன்படி, வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் விசாரணையின்போது துரைமுருகன் மற்றும் அவரின் மனைவி நேரில் ஆஜராகாததால், இருவருக்கெதிராகவும் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
இந்த நிலையில், நீதிபதி இ.பக்தவச்சலு முன்னிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நேரில் ஆஜரான துரைமுருகனின் மனைவி தனக்கெதிராக பிடிவாரன்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், துரைமுருகன் நேரில் ஆஜராகவில்லை.
பின்னர், சாந்தகுமாரியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவருக்கெதிரான பிடிவாரன்ட்டை மட்டும் திரும்பப் பெற்று வழக்கை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஒத்திவைத்தார்.
மேலும், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் துரைமுருகன் நேரில் ஆஜராகவில்லையென்றால் அவருக்கெதிரான பிடிவாரன்ட்டை அமல்படுத்துமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.