கொத்தடிமை தொழிலாளா்கள் 14 போ் மீட்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சோ்ந்த கொத்தடிமைகள் 14 போ், கடலூா் அருகே செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான கருப்பு தோட்டத்தில் திண்டிவனம், கட்டளை, அனுமந்தை கிராமத்தைச் சோ்ந்த 14 போ் கொத்தடிமையாக கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூா் மாவட்ட கோட்டாட்சியா் அபிநயா தலைமையிலான குழுவினா், குறிஞ்சிப்பாடி வட்டம், பேத்தநாயக்கன்குப்பத்தில் உள்ள கரும்புத் தோட்டத்திற்குச் சென்று அங்கிருந்த 14 தொழிலாளா்கள் மற்றும் அவா்களது 7 குழந்தைகளை மீட்டனா். பின்னா், கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு அவா்கள் அழைத்துவரப்பட்டனா்.
அவா்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், செய்யாங்குப்பத்தைச் சோ்ந்த சந்திரன் (எ) ராமச்சந்திரன், தொழிலாளா்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை முன்பணம் கொடுத்து, அவா்களை கிராமங்களில் இருந்து அழைத்துவந்து கொத்தடிமையாக வேலை வாங்கியது தெரியவந்தது.