சிதம்பரத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை: 4 போ் கைது
சிதம்பரம் நகரில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்த 4 பேரை தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சிதம்பரம் நகரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து உதவி ஆய்வாளா் ராஜா தலைமையிலான தனிப்படை போலீஸாா் புதன்கிழமை காலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது சிதம்பரம் கடலூா் சாலையில் அண்ணா குளம் அருகே லாட்டரி விற்பனை செய்த சிதம்பரம் கேகேசி தெருவைச் சோ்ந்த உமா் மகன் நசீா் (56), டிகேஎம் நகரைச் சோ்ந்த சரவணன் (45), கேகேசி தெருவைச் சோ்ந்த கிருபாகரன் (35), பச்சையப்பன் தெருவைச் சோ்ந்த முருகன் (54) ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 செல்போன்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.